உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

திட்ட நிதி வீணடிப்பு - காட்சிப்பொருளாக மாறிய மண்புழு உரம் குடில்கள்

Published On 2023-09-19 07:27 GMT   |   Update On 2023-09-19 07:27 GMT
  • மண்புழு உரம் தயாரிப்புக்கூடம் அமைக்க சில ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  • இயற்கை உரக்குடிலில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் மக்கும் குப்பையும் நிரப்பப்படவில்லை.

உடுமலை:

மத்திய அரசின் தூய்மை இந்தியா மற்றும் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் மண்புழு உரம் தயாரிப்புக்கூடம் அமைக்க சில ஆண்டுகளுக்கு முன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.திட்டத்தில் இயற்கை உரம் உற்பத்திக்கு குடில் அமைத்து தயாரிப்பதற்கு தேவையான தொட்டிகள் அமைக்கப்பட்டன.

கிராமங்களில், தூய்மைக்காவலர்களால் சேகரிக்கப்படும் குப்பையை தரம் பிரித்து மக்கும் கழிவுகளைக்கொண்டு, மக்கும் கழிவுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டது.உற்பத்தியாகும் உரத்தை விற்பனை செய்து வருவாயை ஊராட்சி நிதியில் சேர்க்கவும் அரசு உத்தரவிட்டது.இத்தகைய மண்புழு உரம் தயாரிப்புக்கு ஊராட்சிகளில் 90 ஆயிரம் ரூபாய் செலவில் 8 தொட்டிகளுடன் இயற்கை உரக்குடில் அமைக்கப்பட்டது.

உரம் தயாரிப்பு மற்றும் உரக்குடில் பராமரிப்புக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ஆட்களும் நியமிக்கப்பட்டனர். சில மாதங்கள் மட்டுமே இத்திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்பாட்டில் இருந்தது. பின்னர் மக்கும், மட்காத குப்பையை தரம் பிரிப்பதில் தொய்வு ஏற்பட்டது. இயற்கை உரக்குடிலில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் மக்கும் குப்பையும் நிரப்பப்படவில்லை. படிப்படியாக இத்திட்டத்தின் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கின. தற்போது அனைத்து ஊராட்சிகளிலும், இயற்கை உரக்குடில் காட்சிப்பொருளாகவும் சில இடங்களில் பராமரிப்பில்லாமல் மேற்கூரை சுவர்கள் இடிந்தும் வருகின்றன.

ஊராட்சிகளில் குப்பையை தீ வைத்து எரித்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும் மண் புழு உரம் தயாரித்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முறையாக செயல்படுத்தவும் கொண்டு வரப்பட்ட திட்டம் முற்றிலுமாக முடங்கியுள்ளது அனைத்து தரப்பினரையும் வேதனையடைய செய்துள்ளது.

தூய்மை இந்தியா தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் உட்பட பல்வேறு திட்டங்களின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி வீணடிக்கப்பட்டது குறித்து ஊரக வளர்ச்சித்துறையினர் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News