உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

நெல் விதை உற்பத்தியில் திருப்பூர் மாவட்டத்தின் பங்கு முக்கியமானது - விதைச்சான்று இயக்குனர் பேச்சு

Published On 2022-08-15 07:51 GMT   |   Update On 2022-08-15 07:51 GMT
  • நெல் விதைத் தேவையில் 70 சதவீதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • சிஆர் 1009,ஏஎஸ்டி 16,ஏடிடி 37 ஆகிய ரகங்களை சாகுபடி செய்வதில் தயக்கம் நிலவுகிறது.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் விதை உற்பத்தியாளர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் விதைச்சான்று இயக்குனர் வளர்மதி (சென்னை) தலைமையில் தாராபுரத்தில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது:- உலகத்துக்கே உணவு வழங்கும் உற்பத்தித் தொழிலான விவசாயத்தின் முக்கிய இடுபொருளாக விதைகள் உள்ளது.அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த விதைகளை உற்பத்தி செய்யும் பணியை விதை உற்பத்தியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக தமிழகத்தின் நெல் விதைத் தேவையில் 70 சதவீதம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 72 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் விதை உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்தை தன்னிறைவு பெறச் செய்ததில் நமது மாவட்டத்தின் பங்கு முக்கியமானது. தற்போது விவசாயிகளிடையே குண்டு நெல் ரகங்களான சாவித்திரி, சிஆர் 1009,ஏஎஸ்டி 16,ஏடிடி 37 ஆகிய ரகங்களை சாகுபடி செய்வதில் தயக்கம் நிலவுகிறது. தமிழக அரசின் பொதுவிநியோகத் திட்டத்தில் விநியோகிப்பதற்காக அரசு கொள்முதல் நிலையங்களில் சிகப்பு நிற மட்டை அரிசி ரகமான டிகேஎம் 9 ரகம் கொள்முதல் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டி.கே.எம். 9 ரகம் தவிர அனைத்து குண்டு ரகங்களும் அரசால் கொள்முதல் செய்யப்படும்.

எனவே விதை உற்பத்தியாளர்களும் டிகேஎம் 9 தவிர மற்ற ரக நெல் விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும். மேலும் உற்பத்தியாளர்களும், விவசாயிகளும் விதைச் சான்றுத்துறை அலுவலர்களை நேரடியாக ஒரே இடத்தில் சந்தித்து பயன் பெறும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விதை வளாகம் கட்டப்படவுள்ளது. இதற்கென ரூ.2 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விதைச் சான்றுத்துறை, விதை ஆய்வுத்துறை மற்றும் விதை பகுப்பாய்வு நிலையம் என அனைத்தும் ஒரே வளாகத்தில் அமையவுள்ளது. இது விவசாயிகளுக்கும் விதை உற்பத்தியாளர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக அமையும். இ்வ்வாறு அவர் கூறினார்.  

Tags:    

Similar News