கலெக்டர் வினீத் தலைமையில் கூட்டம் நடைபெற்ற காட்சி.
திருப்பூா் மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டு ரூ.21,530 கோடி கடன் வழங்க இலக்கு - கலெக்டர் தகவல்
- கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.8,215 கோடி கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
- சிறப்பு முகாம்களை நடத்தி விண்ணப்பங்களை பரிசீலனை செய்து கல்விக் கடன்களை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வங்கியாளா்களுக்கான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மக்களவை உறுப்பினா்கள் கே.சுப்பராயன், கு.சண்முகசுந்தரம் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்குத் தலைமை வகித்த மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் 2022-23ஆம் ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கையை வெளியிட்டு பேசியதாவது:-
திருப்பூா் மாவட்டத்தில் 2022-23ம் ஆண்டுக்கான முன்னுரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.21,530 கோடியாகும். இதில், வேளாண்மைத் துறைக்கு 38 சதவீதமாக ரூ.8,206 கோடியும், சிறு வணிகத் துறைக்கு 60 சதவீதமாக ரூ.12,496 கோடியும், பிற முன்னுரிமைக் கடன்களுக்கான வீட்டுக் கடன், மரபுசாரா எரிசக்தி கடன், கல்விக் கடன் மற்றும் இதர கடன்களுக்காக ரூ.478 கோடியும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.8,215 கோடி கூடுதலாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறப்பு முகாம்களை நடத்தி மாணவா்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து உடனடியாக கல்விக் கடன்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.
கூட்டத்தில், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் அலெக்ஸாண்டா், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் லட்சுமணன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் ராமலிங்கம், வங்கியாளா்கள் மற்றும் அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.