உள்ளூர் செய்திகள்

பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்ற காட்சி. 

பல்லடம் - செட்டிப்பாளையம் சாலையில் டாஸ்மாக் கடை திறக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

Published On 2023-09-27 15:43 IST   |   Update On 2023-09-27 15:43:00 IST
  • பேச்சுவார்த்தை முடிவில் மதுபானகடை அங்கு செயல்படாது எனவும் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவித்தனர்.
  • மதுபான கடைக்கு மாற்று இடம் பார்த்துக் கொண்டிருப்பதாக டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

பல்லடம்:

பல்லடம் - செட்டிபாளையம் சாலையில் அரசு டாஸ்மாக் மதுபானக்கடை செயல்பட்டு வந்தது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இந்த டாஸ்மாக் மதுபான கடையில் தினமும் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்கள் மது வாங்க வருவது வழக்கம். இந்த நிலையில் அங்கு மது வாங்க வரும் சிலர் அங்கேயே குடித்து விட்டு அருகிலுள்ள கடைகளுக்கு சென்று படுத்து உறங்குவதும்,ரோட்டிலேயே இயற்கை உபாதைகளை கழிப்பதும் என அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி வருவதாக கூறி, அந்த மதுபானகடையை அங்கிருந்து அகற்றக்கோரி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் 30 ந் தேதி டாஸ்மாக் மதுபான கடையை மூடக்கோரி பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பாய், தலையணையுடன் பொதுமக்கள் குடியேறும் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து நடந்த பேச்சுவார்த்தை முடிவில் மதுபானகடை அங்கு செயல்படாது எனவும் தற்காலிகமாக மூடப்படும் என தெரிவித்தனர்.

இந்த நிலையில் மதுபான கடையை மீண்டும் திறப்பதற்காக பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது டாஸ்மாக் திருப்பூர் மண்டல மேலாளர் சுப்பிரமணியம், பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், துணை தாசில்தார் சுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள், பொதுமக்கள் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டனர். மதுபான கடைக்கு மாற்று இடம் பார்த்துக் கொண்டிருப்பதாகவும் அதுவரை கடை செயல்படும் என டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை கடுமையாக எதிர்த்த பொதுமக்கள் கடை அங்கு மீண்டும் செயல்படக் கூடாது என வலியுறுத்தினர். ஏற்கனவே தாசில்தார் இங்கு கடை செயல்படக் கூடாது என உத்தரவு பிறப்பித்துள்ளார் என பொதுமக்கள் கூறினர். மேற்கண்டவாறு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இறுதியாக அந்தப் பகுதியில் டாஸ்மாக் கடை செயல்பட விடமாட்டோம் என பொதுமக்கள் உறுதியாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News