உள்ளூர் செய்திகள்

மணமக்கள் மரக்கன்றுகள் நட்டபோது எடுத்த படம்.

பல்லடம் அருகே மரக்கன்றுகள் நட்ட மணமக்கள்

Published On 2023-09-21 15:39 IST   |   Update On 2023-09-21 15:39:00 IST
  • திருமண நிகழ்வுகளில் முகூர்த்தக்கால் இடும் நிகழ்வு இன்றளவும் நடைபெறும்.
  • ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள விஷ்ணு வனத்தில் 5 மரக்கன்றுகளை நட்டனர்.

பல்லடம்:

தமிழரின் இயற்கை சார்ந்த பண்பாடு உலகின் மிகச்சிறந்த பண்பாடுகளில் ஒன்று என்பது அனைவரும் அறிந்தது. தமிழர் திருமண நிகழ்வுகளில் மரம் வைத்து இயற்கை அன்னையை வழிபாடு செய்தல் கொங்குப் பகுதிகளில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. திருமண நிகழ்வுகளில் முகூர்த்தக்கால் இடும் நிகழ்வு இன்றளவும் நடைபெறும்.

முந்தைய காலங்களில் இல்லற வாழ்வில் இணையும் இணையர் மரங்களை நட்டு வழிபாடு செய்தல் வழக்கம். நாளடைவில் இந்த நிகழ்வு பெயரளவில் திருமண அரங்குகளில் மர குச்சிகளை வைத்து பூஜை செய்யும் நிகழ்வாக சுருங்கிவிட்டது. இந்த நிலையில் பல்லடம் அருகே புதுமணத் தம்பதிகள் திருமணத்தை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு இயற்கை வழிபாடு செய்த சம்பவம் பொதுமக்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பல்லடம் அருகே உள்ள கரடிவாவி ஊராட்சி 5வது வார்டு உறுப்பினர் ராமசாமி. இவருக்கும் இவரது உறவினர் மனிஷா என்ற பெண்ணிற்கும் கடந்த 17-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தங்களது திருமண விழா நிகழ்வாக கரடிவாவி ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள விஷ்ணு வனத்தில் 5 மரக்கன்றுகளை நட்டனர். பின்னர் மரக்கன்றுகளை வணங்கி இல்லற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். புதுமணத் தம்பதிகள் மரக்கன்று நட்டு இயற்கை வழிபாடு செய்ததை அங்குள்ள பெரியவர்கள், பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

Tags:    

Similar News