உள்ளூர் செய்திகள்

தென்னை விவசாயிகள் பயன்பெற மானிய திட்டங்கள் வேளாண்துறை அறிவிப்பு

Published On 2022-12-07 04:42 GMT   |   Update On 2022-12-07 04:42 GMT
  • தென்னை சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
  • விவசாயிகள் பயனடைய உழவன் செயலியைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் .

 உடுமலை : 

உடுமலை வட்டாரத்தில் நீண்ட காலப்பயிரான தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. இங்கு சுமார் 40ஆயிரம் ஏக்கருக்கு மேல் தென்னை சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் தென்னை சாகுபடியை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு மானியத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

அதன்படி வேளாண்மை உழவர் நலத்துறை-தென்னை வளர்ச்சி வாரியம், மாநில வேளாண்மை வளர்ச்சித் திட்டம் மூலம் தென்னையில் காண்டாமிருக வண்டைக் கட்டுப்படுத்த இனக்கவர்ச்சிப் பொறி 2.5 ஏக்கருக்கு ஒரு எண் என்ற அளவில் முழுவிலையான ரூ.1400 லிருந்து 50 சதவீத மானியத்தில் ரூ.700 க்கு வழங்கப்பட உள்ளது.

மேலும் மெட்டாரைசியம் பூஞ்சாணம் 2.5 ஏக்கருக்கு 4 கிலோ வீதம் ரூ .540 முழு விலையில் 50சதவீத மானியத்தில் ரூ.270 க்கு வழங்கப்பட உள்ளது.

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் ஊராட்சிகளில் பொதுப்பிரிவின் கீழ் 585 ஏக்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 146 ஏக்கர், பிற பஞ்சாயத்துகளில் பொதுப் பிரிவில் 146 ஏக்கர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 37 ஏக்கர் என மொத்தம் 1914 ஏக்கர் பரப்பளவு இலக்கு பெறப்பட்டுள்ளது. ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தென்னையில் உர நிர்வாகம் திட்டத்தில் 145 ஏக்கருக்கு ரூ.3 லட்சத்து 48 ஆயிரம் மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அத்துடன் பண்ணைக்கருவிகள் வழங்கும் திட்டத்தில் 370 பயனாளிகள் பயனடையும் வகையில் ரூ.5 லட்சத்து 55 ஆயிரம் இலக்கு பெறப்பட்டுள்ளது. அனைத்து திட்டங்களிலும் விவசாயிகள் பயனடைய உழவன் செயலியைப் பயன்படுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று வேளாண்மை உதவி இயக்குனர் தேவி கேட்டுக்கொண்டுள்ளார்.  

Tags:    

Similar News