உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

மானியத்தில் மிதியடி தயாரிக்கும் எந்திரம் - மலைவாழ் கிராம பெண்கள் கோரிக்கை

Published On 2022-09-02 10:44 GMT   |   Update On 2022-09-02 10:44 GMT
  • மத்திய கயிறு வாரியம் சார்பில் தென்னை நாரில் கால் மிதியடி தயாரிக்கும் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.
  • மலைவாழ் மக்களுக்கு சுய தொழில் கற்றுத்தர, பல்வேறு திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்பட்டன.

உடுமலை :

ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் 13 மலைவாழ் குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் வனத்தில் சீமாறு புல் உட்பட பொருட்களை சேகரித்து விற்பனை செய்வதன் வாயிலாக கிடைக்கும் குறைந்த அளவு வருவாயை மட்டுமே தங்கள் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர்.எனவே மலைவாழ் மக்களுக்கு சுய தொழில் கற்றுத்தர, பல்வேறு திட்டங்கள் முன்பு செயல்படுத்தப்பட்டன. அதில் மத்திய கயிறு வாரியம் சார்பில் தென்னை நாரில் கால் மிதியடி தயாரிக்கும் பயிற்சி ஊக்கத்தொகையுடன் வழங்கப்பட்டது.இப்பயிற்சியை கரட்டுப்பதி, தளிஞ்சி, கோடந்தூர், நல்லாறு காலனி உட்பட குடியிருப்புகளை சேர்ந்த 400க்கும் அதிகமான பெண்கள் பெற்றுள்ளனர்.

ஆனால் இத்தொழிலை தொடர்ந்து மேற்கொள்ள அவர்களுக்கு கால் மிதியடி தயாரிப்பதற்கான எந்திரம் இல்லை. இதனால் பயிற்சி பெற்றும் சிறுதொழிலை துவக்க முடியாத நிலை உள்ளது. தமிழக அரசு கிராம கூட்டமைப்பு வாயிலாக எந்திரம் மற்றும் தொழில் துவங்க கடனுதவி வழங்கினால் பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

மேலும் தமிழக அரசு சார்பில் தற்போது வன உரிமைச்சட்டத்தின் கீழ் அங்குள்ள விவசாய நிலங்களுக்கு பட்டா வழங்கப்பட்டு வருகிறது. சிறு தானியங்கள் மற்றும் இதர சாகுபடிகளை மலைவாழ் மக்கள் துவக்கியுள்ளனர்.எனவே வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்ய தேவையான பயிற்சி வழங்கவும் அப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Tags:    

Similar News