உள்ளூர் செய்திகள்

மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் கண்வலி விதை விற்பனையை தொடங்க வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2023-08-05 13:38 IST   |   Update On 2023-08-05 13:38:00 IST
  • கண்வலிச் செடி எனப்படும் செங்காந்தள் மலர் செடி சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
  • கண்வலி செடிகளுக்கு பயிர்க்காப்பீடு மற்றும் பொருள் ஈட்டுக்கடன் உள்ளிட்ட சலுகைகளையும் வழங்க வேண்டும்.

மூலனூர்:

திருப்பூர், கரூர், திண்டுக்கல் ஆகிய 3 மாவட்டங்களில், கண்வலிச் செடி எனப்படும் செங்காந்தள் மலர் செடி சாகுபடியில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டுமே அச்செடிகள் வளர்வதற்குரிய காலசூழ்நிலை நிலவுகிறது.

இவ்விதைக்கிழங்கில் மருத்துவ குணம் நிறைந்துள்ள நிலையில் சந்தையில் நல்ல விலை கிடைத்து வந்தது. கிலோ 3,700 ரூபாய்க்கு விற்கப்பட்ட விதை தற்போது 1,500 ரூபாய்க்கு தான் விற்கப்படுகிறது என்கின்றனர் விவசாயிகள்.

இது குறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கூறியதாவது:-

வறட்சி சமயத்தில் போர்வெல் தண்ணீர் பாய்ச்சி தொழிலாளர்களுக்கு தினக்கூலியாக 800 ரூபாய் வரை செலவிட்டு பந்தல் அமைத்து சாகுபடி செய்கிறோம். ஆனால் உழைப்புக்கேற்ற வருமானம் கிடைப்பதில்லை.

இடைத்தரகர்கள் வாயிலாக தான் அவற்றை சந்தைப்படுத்துகிறோம். அவை எங்கு செல்கிறது, யாரிடம் எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது என்ற எந்த விபரமும் எங்களுக்கு தெரிவதில்லை. அரசுத்துறை சார்பில் இந்த சந்தை நிலவரத்தை கண்காணிக்க வேண்டும்.சில வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் கண்வலி கிழங்கு விதைகள், அங்கிருந்து மருந்துகளின் மூலப்பொருட்களாக பயன்படுத்தப்பட்டு மருந்து வடிவில் நமக்கு வருகிறது.

மாநில அரசின் மருத்துவ தாவரங்கள் மற்றும் மூலிகை ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாகவே இவ்விதைகளை கொள்முதல் செய்து குறைந்தபட்ச ஆதார விலையாக 3,000 ரூபாய் நிர்ணயிக்க வேண்டும். ரப்பர் மற்றும் 16 வகை காய்கறி விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநில அரசு பாலுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்து வழங்கி வருகிறது. அதே போன்று, கண்வலி விதைக்கும் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்.கண்வலி செடிகளுக்கு பயிர்க்காப்பீடு மற்றும் பொருள் ஈட்டுக்கடன் உள்ளிட்ட சலுகைகளையும் வழங்க வேண்டும்.மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், கண்வலி விதை விற்பனையை துவக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Tags:    

Similar News