கோப்புபடம்
மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவிகளை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
- அரசு பல்வேறு வகையான நலத் திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தற்போது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் நலத் திட்ட உதவிகளைப் பெற தகுந்த ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:- மாற்றுத் திறனாளிகளின் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு வகையான நலத் திட்ட உதவிகள் வழங்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மாற்று திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதற்கு சிரமமின்றி விண்ணப்பங்களை சமா்ப்பிப்பதற்கு ஏதுவாக சில திட்டங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க தற்போது தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதில், கல்வி உதவித் தொகை, உதவி உபகரணங்கள் பெறவும், வங்கிக் கடன் மானியம், திருமண உதவித் தொகை, மாதாந்திர பராமரிப்பு உதவித் தொகை ஆகியவற்றுக்கு தகுந்த ஆவணங்களுடன் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.ஆகவே, மேற்கண்ட திட்டங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையம் அல்லது இணையதளம் மூலம் விண்ணப்பித்து ரசீதைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.