உள்ளூர் செய்திகள்

பி.ஏ.பி. 3-ம் மண்டலம் பாசனம் - ஜனவரி மாதம் தண்ணீர் திறக்க வாய்ப்பு

Published On 2022-12-15 05:34 GMT   |   Update On 2022-12-15 05:34 GMT
  • நான்கு மண்டலங்களாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.
  • காங்கயம் தாலுகாவிலுள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

உடுமலை : 

பி.ஏ.பி., பாசன திட்டத்தின் கீழ் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 3.77 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. இந்நிலங்கள் நான்கு மண்டலங்களாக பிரித்து சுற்றுக்கள் அடிப்படையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி அணையில் இருந்து பி.ஏ.பி., 2ம் மண்டல பாசனத்திற்கு கடந்த ஆகஸ்டு 26-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.

இதன் வாயிலாக கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, சூலூர் தாலுகா மற்றும் திருப்பூர் மாவட்டத்திலுள்ள உடுமலை, மடத்துக்குளம், திருப்பூர், பல்லடம், தாராபுரம், காங்கயம் தாலுகாவிலுள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

இரண்டாம் மண்டல பாசனத்திற்கு நான்கு சுற்றுக்கள் உரிய இடைவெளி விட்டு டிசம்பர் 24 வரை 7,600 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில் முதல் இரண்டு சுற்றுக்கள் இடைவெளியின்றி வழங்கப்பட்டு மூன்றாம் சுற்றுக்கு ஒரு வாரம் இடைவெளி விட்டு மீண்டும் நீர் திறக்கப்பட்டது.

கடந்த மாதம் 25ந் தேதி, இறுதிச்சுற்றுக்கு நீர் திறக்கப்பட்டு 21 நாட்கள் வழங்க திட்டமிடப்பட்டது. அதன் அடிப்படையில் நீர் வழங்கப்பட்ட நிலையில் பாசனம் நிறைவு பெற உள்ளதால் திருமூர்த்தி அணையிலிருந்து, பிரதான கால்வாயில் நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெற உள்ளதால் பிரதான கால்வாயில் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளது. கீழ் பகுதியிலுள்ள ஒரு சில கால்வாய்களுக்கு மூன்று நாட்கள் வரை நீர் வழங்க வேண்டியுள்ளது. அதற்கு பின் முழுமையாக நீர் திறப்பு நிறுத்தப்படும்.

திருமூர்த்தி அணையில் நீர் சேகரிப்பு , கால்வாய் பராமரிப்பு மற்றும் கால்வாய்களில் மடை மாற்றி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு ஜனவரியில் மூன்றாம் மண்டல பாசனத்திற்கு நீர் திறக்க வாய்ப்புள்ளது என்றனர்.

Tags:    

Similar News