உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்

வரத்து அதிகரிப்பால் குறையும் தக்காளி விலை

Published On 2023-08-10 10:24 GMT   |   Update On 2023-08-10 10:24 GMT
  • தக்காளி விலை உயர்வு மற்றும் தென் மேற்கு பருவ மழை துவங்கியதால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
  • மே - ஜூன் மாதங்களில் நடவு செய்த தக்காளி, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது.

குடிமங்கலம்:

உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் பகுதிகளில் தக்காளி சாகுபடி பிரதானமாக உள்ளது. ஏறத்தாழ 30 ஆயிரம் ஏக்கர் சாகுபடி செய்யப்பட்டு விளையும் தக்காளியை உடுமலை நகராட்சி சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வந்து ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

கேரள மாநிலம் மூணாறு, மறையூர் மற்றும் சென்னை, மதுரை, விருதுநகர் உட்பட பல்வேறு மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வந்து தக்காளி கொள்முதல் செய்து வருகின்றனர்.நடப்பாண்டு கோடை மழை குறைந்ததோடு, தக்காளி விலை கிலோ 5 ரூபாய் என்ற அளவில் சரிந்ததால் தக்காளி சாகுபடி பரப்பு பெருமளவு குறைந்தது.

வழக்கமாக ஏப்ரல்- மே மாதங்களில் நடவு செய்து, ஜூன், ஜூலை மாதங்களில் சராசரியாக ஒரு லட்சம் பெட்டிகள் வரை வரத்து காணப்படும்.நடப்பாண்டு தக்காளி சாகுபடி பரப்பு குறைந்ததால் கடந்த ஜூலை மாதம் தக்காளி விலை உச்சத்தை தொட்டது. அதிக பட்சமாக 14 கிலோ கொண்ட பெட்டி 2,400 ரூபாய் வரை ஏலம் போனது. மொத்த விலையில் கிலோ 180 ரூபாய் வரை விற்றது.

இந்நிலையில் தக்காளி விலை உயர்வு மற்றும் தென் மேற்கு பருவ மழை துவங்கியதால் தக்காளி சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். தற்போது இயல்பை விட கூடுதல் பரப்பளவில் தக்காளி சாகுபடியாகி வருகிறது. மே - ஜூன் மாதங்களில் நடவு செய்த தக்காளி, தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. இதனால் உடுமலை சந்தைக்கு தக்காளி வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் விலையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. அதிகப்பட்சமாக ஒரு பெட்டி 1,200 ரூபாய்க்கு ஏலம் போனது. ஒரு கிலோ தக்காளி, 60 ரூபாய் வரை விலை நிலவியது.

Tags:    

Similar News