உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ஆய்வு

Published On 2022-12-12 04:23 GMT   |   Update On 2022-12-12 04:23 GMT
  • திருப்பூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ராஜன் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார்.
  • திருமுருகன்பூண்டி நகராட்சி அதிக வருவாயை ஈட்டி தருவதால் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்தனர்.

அனுப்பர்பாளையம்:

திருமுருகன்பூண்டி பேரூராட்சி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் பின்னர் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று, நகராட்சி தலைவர், துணைத்தலைவர், கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தநிலையில் நகராட்சி பணிகளில் தொய்வு ஏறபட்டுள்ளதாகவும், நகராட்சி பகுதியில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் வருகிற 14-ந் தேதி உண்ணாவிரத போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நகராட்சி தலைவர் குமார் தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித்துறை நிர்வாக இயக்குனர் பொன்னையனை சென்னையில் சந்தித்து நகராட்சிக்கு தேவையான வசதிகள் குறித்து கோரிக்கை மனு வழங்கி இருந்தார்.

இந்த நிலையில் திருப்பூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் ராஜன் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்தில் ஆய்வு செய்தார். அப்போது நகராட்சி தலைவர் குமார், துணைத்தலைவர் ராஜேஸ்வரி, கவுன்சிலர்கள் ராஜன், யுவராஜ், மதிவாணன், சுப்பிரமணியம், நடராஜ் உள்பட மேலும் ஒரு சில கவுன்சிலர்கள் கலந்து கொண்டு நகராட்சிக்கு நிரந்தர கமிஷனர், அதிகாரிகள் நியமனம், சாலை, குடிநீர், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சாக்கடை கால்வாய் உள்பட பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்து அடுக்கடுக்காக இயக்குனர் ராஜனிடம் கோரிக்கைகளாக வைத்தனர்.

மேலும் திருமுருகன்பூண்டி நகராட்சி அதிக வருவாயை ஈட்டி தருவதால் உடனடியாக கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதற்கு நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் புதிதாக தரம் உயர்த்தப்பட்ட 28 நகராட்சிகளிலும் இந்த பிரசசினை இருப்பதாகவும், அடுத்த சனிக்கிழமைக்குள் ஒரு சில கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும், திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு தேவையான அடிப்படை வசதிகள் இன்னும் ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றிக் கொடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Tags:    

Similar News