உள்ளூர் செய்திகள்

கோப்புபடம். 

தாராபுரம் அருகே மீட்கப்பட்ட ஆக்கிரமிப்பு நிலங்கள் 45 பயனாளிகளிடம் ஒப்படைப்பு

Published On 2022-12-28 09:05 IST   |   Update On 2022-12-28 09:05:00 IST
  • நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த உச்சவரம்பு நிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மீட்டனா்.
  • 45 பயனாளிகளுக்கும் அவா்களுக்கு பட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி விவசாய நிலத்தை பிரித்து வழங்கினா்.

தாராபுரம்:

தமிழகத்தில் அதிக அளவு விவசாய நிலங்களை தங்கள் வசம் வைத்திருந்த நில சுவான்தாரா்களிடம் இருந்து நில உச்சவரம்பு சீா்திருத்த சட்டத்தின்கீழ் விவசாய நிலங்களை கையகப்படுத்திய தமிழக அரசு, அவற்றை நிலமற்ற ஏழை விவசாய கூலி தொழிலாளா்களுக்கு பிரித்து வழங்கியது.

அதன்படி திருப்பூா் மாவட்டம் தாராபுரம் பகுதியை சோ்ந்த தளவாய்பட்டினம், ஊத்துப்பாளையம் பகுதிகளில் நில சுவான்தாரா்களிடம் இருந்து கையகப்படுத்திய 55 ஏக்கா் விவசாய நிலத்தை பிரித்து 45 பயனாளிகளுக்கு கடந்த 2003-ம் ஆண்டு அரசு நில பட்டா வழங்கியது.பட்டா பெற்ற விவசாயிகளுக்கு அவா்களுக்கான நிலத்தை அளந்து பிரித்து எடுப்பதில் கடந்த 19 ஆண்டுகளாக சட்டப்போராட்டம் நடைபெற்று வந்தது. மேலும் அந்த நிலங்கள் நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அரசு வழங்கிய நிலப்பட்டாக்களுக்கு உரிய இடத்தை 45 பயனாளிகளுக்கும் உடனடியாக பிரித்து நில அளவீடு செய்து வழங்க சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடா்ந்து நில உரிமையாளா்களின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த உச்சவரம்பு நிலத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மீட்டனா்.

இதைத்தொடா்ந்து திருப்பூா் மக்களவை உறுப்பினரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டு குழுத் தலைவருமான கே.சுப்பராயன், மாநில துணைச்செயலா் நா.பெரியசாமி, மாநில செயற்குழு உறுப்பினா் எம்.ரவி ஆகியோா் அரசு வழங்கிய உச்சவரம்பு நிலத்துக்கான பட்டாக்களை பெற்றிருந்த 45 பயனாளிகளுக்கும் அவா்களுக்கு பட்டாவில் குறிப்பிட்டுள்ளபடி விவசாய நிலத்தை பிரித்து வழங்கினா்.இதில் சிபிஐ., கட்சியின் தாராபுரம் பகுதி நிா்வாகிகள், பட்டாதாரா்கள் கலந்துகொண்டனா். 

Tags:    

Similar News