காங்கயம் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதி விபத்து - பனியன் நிறுவன அதிபர் பலி
- காரப்பாளையம் பகுதியில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.
- கணவன், மனைவி 2 பேரும் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டனர்.
முத்தூர்:
ஈரோடு மாவட்டம், சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமகிரி (வயது 39). இவர் காரப்பாளையம் பகுதியில் பனியன் கம்பெனி வைத்து நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று (திங்கட்கிழமை) ராமகிரியும் அவரது மனைவி சுமதி ஆகிய 2 பேரும் காங்கயம் - கோவை சாலையில் காங்கயம் நோக்கி ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தனர். ஸ்கூட்டரை ராமகிரி ஓட்டி சென்றார். அப்போது மாலை சுமார் 6 மணி அளவில் காங்கயம் அருகே உள்ள காடையூர் பகுதி பக்கம் சென்று கொண்டிருந்தபோது எதிரே வேகமாக வந்த கார் ஒன்று இவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது வேகமாக மோதியது.
இதில் கணவன், மனைவி 2 பேரும் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டனர். இதையடுத்து தலையில் பலத்த காயம் அடைந்த ராமகிரி மற்றும் அவரது மனைவியை அருகில் இருந்தவர்கள் ஓேடாடி வந்து மீட்டு, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு 2 பேரையும் அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே ராமகிரி பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயங்களுடன் இருந்த சுமதிக்கு கோவை தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து காங்கயம் போலீசார், கார் டிரைவரான நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த தங்கப்பிரகாஷ் (வயது 49) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.