உள்ளூர் செய்திகள்

  சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணனிடம் பொதுமக்கள் புகார் தெரிவித்த போது எடுத்த படம்.

அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் இடத்தை அதிகாரிகள் ஆய்வு

Published On 2022-12-29 06:43 GMT   |   Update On 2022-12-29 06:43 GMT
  • மாவட்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
  • அனுமதி அளிக்கப்பட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு வீட்டை காலை செய்துவிட்டு செல்வதாக தெரிவித்தனர்.

பல்லடம்:

பல்லடம் அருகே அலகுமலையில் அலகுமலை ஜல்லிக்கட்டு காளைகள் நலச்சங்கத்தின் சார்பில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வந்தது. அந்த வகையில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்த ஜல்லிக்கட்டு போட்டியை இந்த ஆண்டு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் ஜனவரி 29-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவது என முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் கடந்த 18-ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வாடிவாசல் மற்றும் பார்வையாளர்கள் அமரும் கேலரி அமைப்பதற்கு கால்கோள் விழா நடைபெற்றது. இந்த கால்கோள் விழாவில் தமிழக ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் ராஜசேகர் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து வாடிவாசல் மற்றும் பார்வையாளர் கேலரிகள் அமைப்பதற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வந்தது. இதில் பல்வேறு முக்கியபிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அலகுமலை ஊராட்சி மன்ற தலைவர் தூயமணி அலகுமலையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதன் அடிப்படையில் நீதிமன்றம் திருப்பூர் மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு ஒன்று பிறப்பித்தது. அதில் மனுதாரரின் கோரிக்கைக்கு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு 6 வாரங்களில் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது.

அதனைத் தொடர்ந்து நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற உள்ள இடத்தில் மாவட்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், இங்கே ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், அனுமதி அளிக்கப்பட்டால் ரேஷன் கார்டுகளை ஒப்படைத்து விட்டு வீட்டை காலை செய்துவிட்டு செல்வதாக தெரிவித்தனர்.மேலும் அங்கு வந்தவர்களில் சிலர் தேர்த்திருவிழா நடைபெற உள்ளதால் அதற்கும் பாதிப்பு ஏற்படும் என்று தெரிவித்தனர். இதனை கேட்டுக் கொண்ட சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மறு உத்தரவு வரும் வரை ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு வாய்மொழியாக உத்தரவிட்டதாகவும், இதனைத் தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News