உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

புதிய உற்பத்தி சார் ஊக்கத்தொகை திட்டம் - திருப்பூர் தொழில் துறையினர் கருத்து தெரிவிக்க வேண்டுகோள்

Published On 2022-08-07 11:36 GMT   |   Update On 2022-08-07 11:36 GMT
  • 15-ந் தேதிக்குள் தொழில் துறையினர் கருத்து தெரிவிக்கவேண்டும்.
  • பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

திருப்பூர் :

ஜவுளித்துறை உற்பத்தி நிறுவனங்களின் எந்திர முதலீடுகளுக்கு மானியம் வழங்கும் புதிய உற்பத்தி சார் ஊக்க தொகை திட்டம் விரைவில் நடைமுறைக்கு வருகிறது. வரைவு நிலையில் உள்ள இந்த திட்டம் குறித்து வரும் 15-ந் தேதிக்குள் தொழில் துறையினர் கருத்து தெரிவிக்கவேண்டும்.

மத்திய ஜவுளித்துறை அமைச்சகம், ஏ-டப்' என்ற திருத்தி அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்துக்கு மாற்றாக, பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த உள்ளது. புதிய திட்டத்துக்கான வரைவு அறிக்கை, கடந்த 3-ந் தேதி வெளியிடப்பட்டது.வரைவு அறிக்கை குறித்து அனைத்து ஜவுளித்துறையினரும் தங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை ஜவுளி அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து திருப்பூர் ஆடிட்டர் அரசப்பன் கூறியதாவது:- பி.எல்.ஐ., என்கிற புதிய திட்டத்தில் ஜவுளி உற்பத்தி எந்திரங்களின் முதலீடுகளுக்கு அதன்மூலம் அடையும் விற்பனை இலக்கு அடிப்படையில் மானியம் வழங்கப்படும். மானிய ஊக்கத்தொகை 5 ஆண்டுகள் தொடர்ச்சியாக வழங்கப்படும். எந்திரம் கொள்முதல் செய்த முதல் ஆண்டில், எந்திரத்தின் முதலீட்டு மதிப்பில் இருமடங்கு வர்த்தகம் மேற்கொள்ளவேண்டும்.அடுத்தடுத்த நான்கு ஆண்டுகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக 10 சதவீதம் வர்த்தகம் மேற்கொள்ளவேண்டும்.வரைவு அறிக்கையின்படி கணக்கிட்டால் 5 ஆண்டுகளில், எந்திரத்திற்கான முதலீட்டில் நிறுவனங்கள் 60 சதவீத தொகையை மானியமாக பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது. குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்தபட்சம் 1 கோடி முதல் 50 கோடி ரூபாய் வரையிலான எந்திரம் முதலீடுகளுக்கும், பெரிய நிறுவனங்களுக்கு 50 கோடி ரூபாய்க்கு மேலான முதலீடுகளுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.நூற்பாலை, நெசவு, பின்னலாடை உற்பத்தி, நிட்டிங், பிராசசிங் டெக்னிக்கல் டெக்ஸ்டைல் என அனைத்து துறையினரும் இந்த திட்டத்தில் எந்திர முதலீடுகளுக்கு ஊக்கத்தொகை பெறமுடியும்.

ஜாப்ஒர்க் நிறுவனங்களுக்கான எந்திர முதலீடுகளுக்கும் புதிய திட்டத்தில் மானிய ஊக்கத்தொகை கிடைக்கும். ஜாப்ஒர்க் ரசீதுகள் விற்பனையாக எடுத்துக்கொள்ளப்படும்.தற்போதுவரை புதிய திட்டம் வரைவு நிலையில் மட்டுமே உள்ளது. ஜவுளித்துறையினர் தங்கள் கருத்துகளை வருகிற 15-ந் தேதிக்குள் சமர்ப்பிக்கவேண்டும். வரும் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாத இறுதிக்குள் புதிய திட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News