உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

அமராவதி அணையில் இருந்து புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு உயிர் தண்ணீர் வழங்க வேண்டும் - தமிழக முதல்-அமைச்சருக்கு மனு

Published On 2023-05-23 11:19 GMT   |   Update On 2023-05-23 11:19 GMT
  • புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
  • புதிய ஆயக்கட்டு பகுதியில் கரும்பு பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது.

உடுமலை :

உடுமலை அமராவதி அணை புதிய ஆயக்கட்டு பாசனத்தில் 25,250 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அணையில் இருந்து பிரதான கால்வாய் வாயிலாக இந்த பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்கப்படும்.புதிய ஆயக்கட்டு பகுதியில் கரும்பு பிரதானமாக சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது போதிய மழை பெய்யாத நிலையில் அணையிலிருந்து புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களுக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கரும்பு பயிரிடுவோர் சங்கம் சார்பில் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: அமராவதி அணை பாசனப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்துள்ளனர். கோடை காலத்தில் போதிய மழை பெய்யாததால் நிலைப்பயிராக உள்ள கரும்புக்கு தண்ணீர் தேவைப்படுகிறது.மேலும் மக்காச்சோளம் உள்ளிட்ட இதர பயிர்களும் போதிய தண்ணீரின்றி பாதிக்கப்படும் நிலை உள்ளது.அணை மற்றும் நீர்பிடிப்பு பகுதியில் கோடை மழை பரவலாக பெய்து வருகிறது.நீர் இருப்பும் திருப்திகரமாக உள்ளது.எனவே, நிலைப்பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் தேவைக்காகவும், அமராவதி அணையிலிருந்து பிரதான கால்வாயில் சிறப்பு உயிர் தண்ணீர் திறக்க வேண்டும்.

இதனால் பல ஆயிரம் ஏக்கரில் நிலைப்பயிர்கள் காப்பாற்றப்படும். மேலும் வழியோர கிராமங்களில், குடிநீர் தட்டுப்பாடும் தவிர்க்கப்படும். இது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News