உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

பல்லடம் கழிவு நீர் அகற்றும் வாகனங்கள் வீதிமீறல்களில் ஈடுபட்டால் ரூ. 50 ஆயிரம் அபராதம் - அதிகாரிகள் அதிரடி

Published On 2023-08-03 04:42 GMT   |   Update On 2023-08-03 04:42 GMT
  • உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு அந்த கருவி செயல்படுவதையும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவுகள் அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும்.
  • விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் முதல் முறைரூ. 25 ஆயிரம் மேலும் இரண்டாவது முறை கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

பல்லடம்:

பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பல்லடம், உடுமலைப்பேட்டை, தாராபுரம், காங்கேயம், வெள்ளகோயில், திருமுருகன்பூண்டி, ஆகிய 6 நகராட்சிகளில் இயங்கும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள் ஆகியோருக்கு சட்ட விதிகள், பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பல்லடம் நகராட்சி ஆணையாளர் முத்துசாமி தலைமை தாங்கினார்.

நகராட்சிகளின் மண்டல தூய்மை பாரத திட்ட பொறுப்பாளர் மகேந்திரன் முன்னிலை வகித்தார். பல்லடம் நகர சுகாதார அலுவலர் செந்தில்குமார் வரவேற்றார்.பல்லடம் சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், சத்தியசுந்தர்ராஜ், மேற்பார்வையாளர்கள் நாராயணன், செந்தில்குமார், மற்றும் உடுமலை, காங்கேயம், உள்ளிட்ட 6 நகராட்சிகளின் சுகாதாரஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், உதவியாளர்கள், உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதில் மனித கழிவுகள் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாகன உரிமையாளர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளால் 2 ஆண்டு செல்லத்தக்க வாகன உரிமம் விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்கப்படும். இதற்கான கட்டணம் ரூ.2 ஆயிரம். உரிமம் பெற்றவர்களை தவிர வேறு எந்த நபரும் கட்டிடத்தில் இருந்து மனித கழிவுகள், மற்றும் கழிவு நீரை கொண்டு செல்வது மற்றும் அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபடுவது சட்ட விதிமுறைகளுக்கு முரணானது. நகராட்சியால் வழங்கப்படும் இந்த உரிமத்தை வாகனத்தின் முன்புறம் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். உரிமம் பெற்றவர்கள் குறிப்பிட்டுள்ளபடி நேரம், வழித்தடம் ஆகியவற்றை பின்பற்றி குறிப்பிடப்பட்ட இடத்தில் முறைப்படி கழிவுநீரை அப்புறப்படுத்த வேண்டும்.

உரிமம் பெற்றவரின் வாகனம் பரிந்துரைக்கப்பட்டபடி ஜி.பி.எஸ். பொருத்தப்பட்டு இருப்பதை உறுதி செய்வதுடன், அந்த கருவி செயல்படுவதையும் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து தரவுகள் அனுப்புவதையும் உறுதி செய்ய வேண்டும். உரிமத்தில் வகுக்கப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் படி, விதிமீறல்கள் எதுவும் கண்டறியப்பட்டால் முதல் குற்றத்திற்கு ரூ. 25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 2வது மற்றும் தொடர் குற்றங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர் குற்றங்களை செய்தால் உரிமத்தை இடைநிறுத்தல் அல்லது ரத்து செய்வதோடு, குறிப்பிட்ட கருவி அல்லது உபகரணங்கள் உள்ளிட்ட எந்த ஒரு வாகனத்தையும் அல்லது பிற பொருட்களையும் பறிமுதல் செய்யவும் வழிவகை உள்ளது. அகற்றப்படும் கழிவுகளை குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே கொட்ட வேண்டும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News