உள்ளூர் செய்திகள்

பேரணியில் பிரம்மாண்ட தேசிய கொடியை மாணவர்கள் கொண்டு சென்ற காட்சி.

திருப்பூரில் சுதந்திர தின பவளவிழாவையொட்டி பிரம்மாண்ட பேரணி - அலைகடலென திரண்ட பள்ளி-கல்லூரி மாணவர்கள்

Published On 2022-08-14 10:31 GMT   |   Update On 2022-08-14 10:31 GMT
  • அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர், மாநகர போலீஸ் கமிஷனர், எஸ்.பி., மேயர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பேரணியை தொடங்கி வைத்தனர்.
  • 75 வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

திருப்பூர் :

நாட்டின், 75வது சுதந்திர தின பவள விழாவையொட்டி திருப்பூரில் இன்று பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் பங்கேற்ற பிரம்மாண்ட சுதந்திர தினவிழா பேரணி நடைபெற்றது. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு, இன்று காலை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், கலெக்டர் வினீத், மாநகர போலீஸ் கமிஷனர் பிரபாகரன், எஸ்.பி.,சஷாங் சாய், மேயர் தினேஷ்குமார் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பேரணியை தொடங்கி வைத்தனர். முன்னதாக, 75 வகை மரக்கன்றுகள் நடப்பட்டன.

அலங்கார ஊர்தி, ஊர்க்காவல் படையினரின் மிடுக்கான பேண்ட் வாத்திய அணிவகுப்பு,தேசியக்கொடி ஏந்திய குதிரை வீரர்கள் அணிவகுப்பு, பள்ளி மாணவர்களின் ஸ்கேட்டிங், மராத்தான் வீரர்களின் மித ஓட்டம், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அணிவகுப்பு, தொழில் அமைப்பினரின் அணிவகுப்பு, பொதுநல அமைப்பினர், தன்னார்வ அமைப்பினர், லயன்ஸ் மற்றும் ரோட்டரி அமைப்பினரின் சீரான அணிவகுப்புடன் பல்வேறு தரப்பினரும் பிரம்மாண்ட பேரணியில் பங்கேற்றனர். பேரணியில் பல அடி நீளமுடைய பிரம்மாண்ட தேசிய கொடியை மாணவர்கள் கொண்டு சென்றனர். இது பார்ப்போரை பிரமிக்க வைத்தது.

4 இடங்களில், பவளக்கும்மியாட்டம், பெருஞ்சலங்கையாட்டம், பரத நாட்டியம் போன்ற, மேடை கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பேரணி பழைய பஸ் நிலைய மேம்பாலம், வளர்மதி பாலம், பார்க்ரோடு வழியாக, நஞ்சப்பா பள்ளியை சென்றடைந்தது. பள்ளி வளாகத்தில் பேரணியை வரவேற்கும் வகையில் தேசப்பற்று கலை நிகழ்ச்சிகளும், தன்னம்பிக்கை பேச்சாளர் பாரதி பாஸ்கரின் சுதந்திர தின எழுச்சி சொற்பொழிவும் நடைபெற்றது. வானுயர பறக்கும் தேசியக்கொடியை ஏற்றி வைத்து, மூவர்ண பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன. சுதந்திர தின பவளவிழா உறுதிமொழி ஏற்பு, தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது. தேசப்பற்றை நெஞ்சில் சுமந்தபடி, தேசியக்கொடியை கையில் ஏந்தியபடி, வீரர், வீராங்கனைகளும், எதிர்கால சந்ததியினரும் பேரணியில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News