உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்

ஓ.இ.மில்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.500 கோடி உற்பத்தி இழப்பு

Published On 2023-07-20 12:31 IST   |   Update On 2023-07-20 12:31:00 IST
  • தமிழகத்தில் 5 சதவீதம் மட்டுமே பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது.
  • மின் கட்டண உயர்வு குறையாமல், கழிவுப்பஞ்சு விலை குறையாமல், ஓ.இ. நூல் மில்களை இயக்க முடியாது.

திருப்பூர்:

நூற்பாலைகளில் இருந்து கிடைக்கும் கழிவு பஞ்சை மறுசுழற்சி செய்யும் நூற்பாலைகளை ஓ.இ. நூற்பாலைகள் என்று அழைக்கப்படுகிறது. இந்தநிலையில் கழிவு பஞ்சு விலை உயர்வை கட்டுப்படுத்தவும், மின் கட்டணத்தை குறைக்கவும் வலியுறுத்தி கடந்த 5-ந் தேதி முதல் ஓ.இ. நூற்பாலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இன்று 15-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

இதனால் தமிழகம் முழுவதும் தினமும் ரூ.40 கோடி ரூபாய் உற்பத்தி இழப்பும், நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.15 நாட்களில் ரூ.500கோடிக்கு மேல் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளித்துறை கூட்டமைப்பு மாநிலத் தலைவர் ஜெயபால் கூறியதாவது:-

கடந்த 1 வருடமாக பருத்தி விலை உயர்வு காரணமாக கழிவுபஞ்சு விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது ஒரு கிலோ கழிவு பஞ்சு ரூ.110 வரை உயர்ந்து உள்ளது. இந்த விலைக்கு இணையாக ஓ.இ. நூல் உற்பத்தி செய்து கொடுக்க முடியவில்லை. சமீப காலமாக பருத்தி விலை குறைந்தாலும் கழிவுபஞ்சு விலை மட்டும் குறையவில்லை.

தமிழகத்தில் 5 சதவீதம் மட்டுமே பருத்தி உற்பத்தி செய்யப்படுகிறது. மீதமுள்ள 95 சதவீதத்தை வட மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் ஒரு கிலோவிற்கு ரூ.7 முதல் ரூ.10 வரை கூடுதல் செலவாகிறது.

இதற்கிடையே தமிழக அரசு மின் கட்டணத்தை தாறுமாறாக உயர்த்தியுள்ளது. பெரிய தொழிற்சாலைகளுக்கு வேண்டுமானால் பீக் ஹவர்ஸ் என்பது சரியாக இருக்கும். சிறு, குறு, தொழிலான ஜவுளி தொழிலுக்கு இது சாத்தியம் இல்லாதது. மின் கட்டண உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.

தற்போது உள்ள சூழ்நிலையில் கிலோ ஒன்றுக்கு ரூ.20 வரை நஷ்டம் ஏற்படுகிறது. . மின் கட்டண உயர்வு குறையாமல், கழிவுப்பஞ்சு விலை குறையாமல், ஓ.இ. நூல் மில்களை இயக்க முடியாது. எனவே மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News