உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

சமூக வலைதள தகவல்களை நம்பி போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் - கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2022-09-27 07:55 GMT   |   Update On 2022-09-27 07:55 GMT
  • பா.ஜ.க., இந்து அமைப்பு நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தியது.
  • வாட்ஸ் ஆப் மூலம் தவறான தகவல் பரவுவது குறித்தும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாகவும் அறிவுரைகள் வழங்கினர்.

திருப்பூர் :

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு மற்றும் கல்வீச்சு சம்பவங்களால் கடந்த சில நாட்களாக பதற்றம் நிலவுகிறது. திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுடன் மாநகர போலீஸ் மற்றும் மாவட்ட போலீசார் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

பா.ஜ.க, உட்பட இந்து அமைப்பு நிர்வாகிகளுடன், மாவட்ட நிர்வாகம் இதுதொடர்பாக ஆலோசனை நடத்தியது. பின் இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகளுடனும் ஆலோசிக்கப்பட்டது.கலெக்டர் வினீத், போலீஸ் கமிஷனர் பிரபாகரன், எஸ்.பி., சசாங் சாய் ஆகியோர், சமூக வலைதளங்கள், வாட்ஸ் ஆப் மூலம் தவறான தகவல் பரவுவது குறித்தும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு தொடர்பாகவும் அறிவுரைகள் வழங்கினர்.

இது குறித்து கலெக்டர் கூறியதாவது:- வாட்ஸ் ஆப் , சமூக வலைதளங்கள் வாயிலாக , சம்பவம் நடந்தது போல் தவறான தகவல்களை பரப்பி விடுகின்றனர். தகவல் உண்மையா என்று தெரிந்து கொள்ளாமல் சிலர் போராடுவதால் வீண் பதற்றம் ஏற்படுகிறது.சட்டம், ஒழுங்கு தொடர்பான பிரச்சினை மற்றும் அச்சுறுத்தல் இருந்தால், கட்சி நிர்வாகிகளும், அமைப்பினரும் போலீசுக்கு தகவல் அளிக்க வேண்டும். வருவாய்த்துறைக்கும் உடனடியாக தகவல் கொடுக்கலாம்.பிரச்சினைகள் இருப்பதால் உரிய பாதுகாப்பு தேவையென்றாலும் முன்கூட்டியே போலீசில் தெரிவிக்க வேண்டும். மாவட்ட அளவிலான, சட்டம் ஒழுங்கு கூட்டம் வாயிலாக அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியினருக்கு சட்டம் ஒழுங்கு பராமரிப்பு தொடர்பான ஆலோசனை வழங்கியுள்ளோம்.

மாவட்டத்தில், பொதுமக்கள் அச்சமின்றி வாழ வசதியாக வருவாய் கோட்ட அளவிலும் தாலுகா அளவிலும் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News