கோப்புபடம்
மாணவா்கள் விளையாடுவதற்கு நேரத்தை ஒதுக்க வேண்டும் - மாவட்ட விளையாட்டு அலுவலா் அறிவுறுத்தல்
- நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 சாா்பில் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2 நாள்களாக நடைபெற்றன.
- தவறான பாதையில் செல்வதை தடுப்பதற்கும் விளையாட்டு பெரும் உதவியாக இருக்கும்
திருப்பூர் :
நாட்டு நலப்பணித் திட்ட தின வருகிற 24-ந் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு திருப்பூா் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலகு 2 சாா்பில் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2 நாள்களாக நடைபெற்றன.
இதன் நிறைவு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு நாட்டு நலப்பணித்திட்ட அலகு -2 ஒருங்கிணைப்பாளா் மோகன்குமாா் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வா் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
இதில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற மாவட்ட விளையாட்டு அலுவலா் ராஜகோபால் பேசியதாவது:-
மாணவா்கள் சமூக வலைதளங்களில் ஈடுபடுவதை தவிா்த்துவிட்டு தங்களுக்குப் பிடித்தமான விளையாட்டுகளை விளையாட வேண்டும். மேலும், புதிதாக விளையாட்டுகளை கற்றுக்கொள்ளுங்கள். உடல் வலிமையாக இருப்பதற்கும், மனதை ஒருங்கிணைத்து கவனச்சிதறலை தவிா்ப்பதற்கும், தவறான பாதையில் செல்வதை தடுப்பதற்கும் விளையாட்டு பெரும் உதவியாக இருக்கும். எனவே மாணவா்கள் தினமும் விளையாடுவதற்கான நேரத்தை ஒதுக்க வேண்டும் என்றாா்.
முன்னதாக கபடி, இறகுப்பந்து, வலைபந்து, சதுரங்கம், கேரம், தொடரோட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டன. போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வருகிற செப்டம்பா் 24 -ந் தேதி வழங்கப்பட உள்ளன.