ஆலோசனை கூட்டம் நடந்த போது எடுத்த படம்
தேர்தல் பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம்
- காவல்துறை பாதுகாப்பு விவரம் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
- தற்போது நடைபெற்று முடிந்த மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
திருப்பூர்:
தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலையில் திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணிகள் தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளின் காலிப்பணியிட விபரம், மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் இருப்பில் உள்ள விபரம், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் இருப்பு,தேர்தல் பொருட்கள் இருப்பு விபரம், தேர்தல் வழக்குகள் குறித்த விவரம் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் காவல்துறை பாதுகாப்பு விவரம் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
காலிப்பணியிடத்தினை பொறுத்த வரையில் ஊரக உள்ளாட்சி அமைப்பில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி 19 எண்ணிக்கை காலியிடம் ஏற்பட்டுள்ளது எனவும், ஊராட்சித் துணைத்தலைவர்பதவி 3 எண்ணிக்கை காலியிடம் ஏற்பட்டுள்ளது எனவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவி 2 எண்ணிக்கையும், நகராட்சி வார்டு உறுப்பினர் பதவி 1 எண்ணிக்கை காலியிடம் ஏற்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த காலியிடங்கள் இறப்பு மற்றும் ராஜினாமா ஆகிய காரணங்களினால் ஏற்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற்று முடிந்த மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் தேர்தல் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இக்கலந்தாய்வு கூட்டத்தில் மாநகர காவல் துணை ஆணையர் வனிதா, மாவட்ட ஊரக வளர்ச்சிமுகமையின் திட்ட இயக்குநர் லட்சுமணன் மற்றும் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(வளர்ச்சி) வாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.