உள்ளூர் செய்திகள்

மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகளை கலெக்டர் வினீத், பாராட்டி வாழ்த்து தெரிவித்தபோது எடுத்த படம்.

7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சேர்ந்த 29 மருத்துவ மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் பாராட்டு

Published On 2022-11-09 11:23 GMT   |   Update On 2022-11-09 11:23 GMT
  • 2021-22-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
  • மாணவ-மாணவிகளுக்கு இதயதுடிப்பு மாணி மற்றும் மருத்துவர் வெள்ளை அங்கியை கலெக்டர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

திருப்பூர் :

திருப்பூர் மாவட்டத்தில் 2021-22-ம் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்று 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டில் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து சாதனை படைத்த மாணவ-மாணவிகளுக்கு பாராட்டு விழா நேற்று திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார்.

விழாவில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 7 மாணவிகள், கணபதிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவ-மாணவிகள், உடுமலை பாரதியார் நூற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 3 மாணவிகள், கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவ-மாணவிகள், அய்யங்காளிபாளையம் வி.கே.அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவ-மாணவிகள், கே.எஸ்.சி. மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 2 பேர்.

பெருமாநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவ-மாணவிகள், பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 மாணவிகள், உத்தமபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவர், அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவி, பொல்லிக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவரும், மடத்துக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவரும், தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவரும், எலையமுத்தூர் எஸ்.என்.வி.அரசு மேல்நிலைப்பள்ளியில் ஒரு மாணவரும் என மொத்தம் 14 அரசு பள்ளிகளில் படித்த 29 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

விழாவில் மாணவ-மாணவிகளுக்கு இதயதுடிப்பு மாணி மற்றும் மருத்துவர் வெள்ளை அங்கியை கலெக்டர் வழங்கி வாழ்த்து தெரிவித்தார். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி திருவளர்ச்செல்வி, மாவட்ட கல்வி அதிகாரி பழனிச்சாமி (உடுமலை), முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர், நீட் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ், கூடுதல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News