தமிழ்நாடு செய்திகள்

அலுவல் கூட்டம், வருகைப் பதிவேடு, வகுப்பு புறக்கணிப்பு - அரசு டாக்டர்கள் போராட்டம் தீவிரம்

Published On 2026-01-30 11:40 IST   |   Update On 2026-01-30 11:40:00 IST
  • டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுமென 4 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம்.
  • தற்போது நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

சென்னை:

அரசு டாக்டர் சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் 48 மணி நேரம் உண்ணாவிரத போராட்டம் நேற்று முன்தினம் தொடங்கியது.

அதன் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் பாலகிருஷ்ணன் தலைமையில் அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் உண்ணாவிரதம் இருந்து வந்த டாக்டர்களிடம் அரசு உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுக உடன்பாடு ஏற்படாததால் இன்று முதல் மீண்டும் போராட்டத்தை தீவிரபடுத்தியுள்ளனர்.

ஒத்துழையாத போராட்டம் என்ற அடிப்படையில் அரசு டாக்டர்கள் பல்வேறு பணிகளைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்து உள்ளனர்.

அரசு ஆஸ்பத்திரியில் பயோமெட்ரிக் வருகை பதிவை புறக்கணிப்பது வாட்ஸ் அப் குழு, ஆன்லைன் மற்றும் நேரடியாக நடைபெறும் அலுவல் சார்ந்த கூட்டங்களை புறக்கணித்தல், மருத்துவ மாணவர்களின் வகுப்புகள் புறக்கணிப்பு என அரசுக்கு ஒத்துழைக்காமல் போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகிறார்கள்.

தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து அரசு டாக்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:-

டாக்டர்கள் கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டுமென 4 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகிறோம். சம்பள உயர்வு, ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ரூ.3000 படி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினோம்.

அதனை நிறைவேற்றவில்லை. பொதுமக்கள் நலன் பாதிக்கக்கூடாது என்பதற்காக நாங்கள் போராட்டத்தை மேற்கொள்ளாமல் தொடர்ந்து வலியுறுத்தி வந்தாலும் நிறைவேற்ற முன்வரவில்லை.

இன்று முதல் எங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி உள்ளோம். 4 பணிகளை புறக்கணித்து உள்ளோம். பிப்ரவரி 4-ந் தேதி வரை ஒத்துழையாமை போராட்டம் நடைபெறும். அதன் பின்னர் மாநில செயற்குழு கூடி அடுத்தகட்ட போராட்டத்தை முடிவு செய்வோம்.

தற்போது நடைபெறுகின்ற இந்தப் போராட்டத்தால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மருத்துவர்கள் சேவையில் எந்த குறைவும் இருக்காது. அடுத்த வாரம் புதன்கிழமை மீண்டும் அடுத்த கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News