கண்காட்சியை பார்வையிட்ட பெற்றோர்களுக்கு மாணவர்கள் விளக்கம் அளித்த காட்சி.
திருப்பூர் பள்ளியில் நாணயங்கள் கண்காட்சி
- பழைமையான நாணயங்களை கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர்.
- வெளிநாட்டு நாணயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு, அது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
அனுப்பர்பாளையம் :
திருப்பூர் பாண்டியன் நகர் மாநகராட்சி தொடக்கப்பள்ளியில் நாணயங்கள் கண்காட்சி நடைபெற்றது. இதில் பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் வரவேற்றார். 2-வது வார்டு கவுன்சிலர் மாலதி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். மாற்றுத் திறனாளிகள் வாரத்தையொட்டி அந்த பகுதியை சேர்ந்த மாற்றுத் திறனாளியான இளம்ஞாயிறு என்பவரை கவுரவப்படுத்தும் வகையில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
இதில் பள்ளியை சேர்ந்த மாணவ-மாணவிகள் இந்தியாவின் பழைமையான நாணயங்கள் முதல் தற்போது பயன்பாட்டில் உள்ள நாணயங்களையும், வெளிநாட்டு நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுக்களையும் கண்காட்சியில் காட்சிப்படுத்தி இருந்தனர். மேலும் நாணயங்கள் எங்கு தயார் செய்யப்படுகிறது? எந்த ஆண்டில் எந்தெந்த நாணயங்கள் தயார் செய்யப்பட்டு, பயன்பாட்டில் இருந்தது என்பதையும், மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திரபோஷ், பகத்சிங், ரவீந்திரநாத்தாகூர் உள்பட முக்கிய தலைவர்கள் படத்துடன் பயன்பாட்டில் இருந்த நாணயங்கள் பற்றிய முழு தகவல்கள் அடங்கிய கண்காட்சியை பார்வையிட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மாணவர்கள் விளக்கிக் கூறினார்கள். இதேபோல் வெளிநாட்டு நாணயங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு, அது தொடர்பான விளக்கங்கள் அளிக்கப்பட்டது. கண்காட்சியை பார்வையிட்டு வெளியே வந்தவர்களிடம் மாணவர்கள் அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தனர். இதில் ஏராளமான மாணவர்களும், பெற்றோரும் கலந்து கொண்டு ஆர்வமுடன் நாணயங்களை பார்வையிட்டு, தகவல்களை அறிந்துக் கொண்டனர்.