உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

காவிரி கூட்டு குடிநீர் விநியோக பணியாளர்கள் நாளை வேலைநிறுத்தம்

Published On 2022-09-06 07:29 GMT   |   Update On 2022-09-06 07:29 GMT
  • 150-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.
  • அனைத்து குடிநீர் வினியோக பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

வெள்ளகோவில் :

ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றங்கரையோர பகுதியில் உள்ள குடிநீர் கலன்களில், குடிநீர் சேமிக்கப்பட்டு ராட்சத குழாய்கள் வழியாக காவிரி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சி பகுதிகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த பணிகளுக்காக குடிநீர் நீரேற்று நிலையம், குடிநீர் வினியோக மையங்களில் சுமார் குடிநீர் மின் மோட்டார் இயக்குபவர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள் மொத்தம் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த பணியாளர்கள் அனைவருக்கும் காவிரி குடிநீர் வினியோகம் தனியார் ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் ஆண்டிற்கு ஒரு முறை ஒப்பந்தம் செய்து ரூ.9 ஆயிரத்து 500 முதல் ரூ.16 ஆயிரம் வரை ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த ஜூன் மாதம் வரை சென்னை தனியார் ஒப்பந்த நிறுவனம் எடுத்த ஒப்பந்தம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு அனைத்து குடிநீர் வினியோக பணியாளர்களுக்கு மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தம் காலக்கெடு கடந்த ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த நிலையில் கடந்த ஜூலை, ஆகஸ்டு ஆகிய 2 மாதங்களுக்கும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் நேரடியாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் காவிரி குடிநீர் மின் மோட்டார் இயக்குபவர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள் அனைவருக்கும் நிலுவையில் உள்ள கடந்த 2 மாத பாக்கி ஊதியம் வழங்கப்படவில்லை.

இதனால் கடந்த 2 மாத ஊதியத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வழங்காததை கண்டித்தும், உடனடியாக வழங்க கோரியும் நாளை 7-ந்தேதி (புதன்கிழமை) காலை 6 மணி முதல் குடிநீர் மின் மோட்டார் இயக்குபவர்கள், குடிநீர் வினியோகம் செய்பவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

Tags:    

Similar News