உள்ளூர் செய்திகள்

ஏழுமலையானை தரிசித்து வருகின்ற பக்தர்களை படத்தில் காணலாம்.

உடுமலை வனப்பகுதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு மஞ்சள் பை வழங்கி விழிப்புணர்வு

Update: 2022-09-27 08:19 GMT
  • பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான மலைப்பாதையில் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.
  • புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே, நடக்கத்துவங்கினர்.

உடுமலை :

உடுமலை அருகே ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் ஆயிரம் ஆண்டு பழமையான ஏழுமலையான் கோவில் அமைந்துள்ளது.ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் கேரள மாநிலம் மற்றும் மாநிலத்தில் பல பகுதிகளிலிருந்தும், இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் அடர்ந்த வனப்பகுதியில், கரடு, முரடான மலைப்பாதையில் 7 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக இக்கோவிலுக்கு பக்தர்கள் அனுமதிக்காத நிலையில் புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையன்று ஏராளமான பக்தர்கள் அதிகாலை முதலே, நடக்கத்துவங்கினர்.மலைமேலுள்ள தீர்த்த கிணற்றில் நீர் எடுத்து அவுல், பச்சரிசி, தேங்காய், பழம் ஆகியவற்றை, சுவாமிக்கு படைத்து வழிபட்டனர்.

மலையடிவாரம் முதல் கோவில் வளாகம் வரை வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.பக்தர்கள் வசதிக்காக வரிசை தடுப்புகள், பந்தல் உள்ளிட்டவை அமைக்கப்பட்டிருந்தன. வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டதால் மலையடிவாரத்திலேயே, வனத்துறையினர் சோதனை மேற்கொண்டு பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மஞ்சள் பை மற்றும் காகித பை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Tags:    

Similar News