கைது செய்யப்பட்ட ஜீனஸிர்.
பல்லடம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடிய வாலிபர் கைது
- ஜீவானந்தம் (வயது 34) இவர் பல்லடத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார்
- வீட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 4 லட்சம் மற்றும் 2 1/4 பவுன் நகை ஆகியவற்றை காணவில்லை.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள கொடுவாய் மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜீவானந்தம் (வயது 34). இவர் பல்லடத்தில் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 23-ம் தேதி குடும்பத்துடன் திண்டுக்கல் சென்று விட்டார். பின்னர் அடுத்த நாள் காலையில் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதிர்ச்சி அடைந்த ஜீவானந்தம் உள்ளே சென்று பார்த்த போது வீட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 4 லட்சம் மற்றும் 2 1/4 பவுன் நகை ஆகியவற்றை காணவில்லை. இது குறித்து ஜீவானந்தம் அவினாசி பாளையம் போலீசில் புகார் தெரிவித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று பெருந்தொழுவு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒருவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர் திருப்பூர் காலேஜ் ரோட்டை சேர்ந்த அப்பாஸ் என்பவரது மகன் ஜீனஸிர்(20) என்பதும், இவர் ஜீவானந்தம் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடியது தெரிய வந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரொக்கம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.