உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட கண்ணன்.

திருப்பூர்-கோவையை கலக்கிய பிரபல கொள்ளையனுக்கு 6 ஆண்டு சிறை

Published On 2023-07-28 15:45 IST   |   Update On 2023-07-28 15:45:00 IST
  • மோட்டார் சைக்கிள் திருட்டு, வீடுகளில் கொள்ளை, வழிப்பறி என பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.
  • புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.

ஊத்துக்குளி:

சேலம் மாவட்டம் சீலை நாயக்கன்பட்டியை சேர்ந்த ராமச்சந்திரன் மகன் கண்ணன். இவர் கடந்த 15 ஆண்டுகளாக திருப்பூர் மங்களம் ரோடு குளத்துப்புதூரில் வசித்து வருகிறார். இவர் மீது கடந்த 2013-ம் ஆண்டு முதல் சேலம் மாவட்டம், சேலம் மாநகரம், ஈரோடு, திருப்பூர் மாவட்டம், திருப்பூர் மாநகரம்,கோவை உள்ளிட்ட இடங்களில் மோட்டார் சைக்கிள் திருட்டு, வீடுகளில் கொள்ளை, வழிப்பறி என பல்வேறு திருட்டு வழக்குகள் உள்ளது.

இவர் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12-ந்தேதி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பெட்டிக்கடை என்ற கிராமத்தைச் சேர்ந்த விஷ்வராஜ் என்பவரின் வீட்டில் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 4 பவுன் தங்க செயினை திருடிச் சென்றார்.இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ஊத்துக்குளி போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று தடயங்களை சேகரித்தனர்.

பின்னர் கைரேகை பிரிவு நிபுணர்களை வரவழைத்து அங்கிருந்த ரேகையை பதிவு செய்தபோது அது தொடர் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் கண்ணன் ரேகையுடன் ஒத்துப்போனதை கண்டறிந்து அவரை கைது செய்து திருடிய நகையை மீட்டு அவரை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு ஊத்துக்குளி குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் கண்ணன் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த ஊத்துக்குளி நீதிபதி, கண்ணன் மீது சுமத்தப்பட்ட குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags:    

Similar News