உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

4-வது குடிநீர் திட்டம் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் வினியோகம் - முதல்கட்ட பணிகள் விரைவில் தொடக்கம்

Published On 2023-08-21 13:26 IST   |   Update On 2023-08-21 13:26:00 IST
  • 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • 20, 30, 44, 51 ஆகிய 4 வார்டுகளில் மக்கள் அதிகம் உள்ள வார்டுகளாகும். அதனால் அந்த வார்டுகளில் இந்த பணிகள் முதல்கட்டமாக தொடங்கப்பட உள்ளது.

திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சியில் வசிக்கும் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 4-வது குடிநீர் திட்டம் ரூ.1,120½ கோடியில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஆழ்குழாய் கிணறு மூலமாக தண்ணீர் உறிஞ்சப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்பட்டு திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு வினியோகம் செய்யும் பணிகள் பகுதி வாரியாக தொடங்கி நடந்து வருகிறது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் என்பது 60 வார்டுகளில் உள்ள குடியிருப்புகள், தொழில் நிறுவனங்களுக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவதாகும். வார்டு வாரியாக பகிர்மான குழாய்கள் இணைப்பு பணிகள் முடிந்து மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றி வினியோகம் செய்யப்படுகிறது. ஒரு சில வார்டுகளில் மட்டும் முழுமையான அளவில் பணிகளை மேற்கொள்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் 4-வது குடிநீர் திட்டத்தில் 4 வார்டுகளில் மட்டும் 24 மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்வதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று மாமன்ற கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் அறிவித்தார். அதன்படி 20,30, 44, 51 ஆகிய 4 வார்டுகளில் 24 மணி நேரம் குடிநீர் வினியோகம் செய்வதற்கான ஆரம்பகட்டப்பணிகள் தொடங்கப்பட உள்ளது.

மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றப்பட்டு, மேற்கண்ட 4 வார்டுகளில் குடியிருப்புகளில் குழாயை திறந்தால் 24 மணி நேரம் தண்ணீர் வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. இதற்காக மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் அளவு குறைந்தாலும் உடனடியாக நிரப்பும் பணிகள், குடிநீர் வினியோகம் செய்யும்போது குடிநீரின் அளவை கண்டறியும் ஸ்கேடா கருவிகள் பொருத்தும் பணிகள் நடைபெற உள்ளது.

20, 30, 44, 51 ஆகிய 4 வார்டுகளில் மக்கள் அதிகம் உள்ள வார்டுகளாகும். அதனால் அந்த வார்டுகளில் இந்த பணிகள் முதல்கட்டமாக தொடங்கப்பட உள்ளதாக மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.

Tags:    

Similar News