உள்ளூர் செய்திகள்

 சிறப்பு அலங்காரத்தில் முனீஸ்வரர். பலி கொடுக்க பன்றியை அழைத்து வந்த பக்தர்கள்.

பல்லடம் முனீஸ்வரர் கோவில் விழாவில் 150 பன்றிகளை பலியிட்டு பக்தர்கள் வழிபாடு

Published On 2022-08-18 05:45 GMT   |   Update On 2022-08-18 05:45 GMT
  • 2 வருடங்களாக, கொரோனா தொற்று தடை காரணமாக பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறவில்லை.
  • பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

பல்லடம் :

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தில் முனீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2 வருடங்களாக, கொரோனா தொற்று தடை காரணமாக பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெறவில்லை. இந்த வருட பொங்கல் பூச்சாட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இதையொட்டி விநாயகர் வழிபாடு, வீரமாத்தியம்மனுக்கு பூஜை,முனீஸ்வரர் சுவாமிக்கு அபிஷேக பூஜை,பொங்கல் சாட்டுதல், முனீஸ்வரர் சுவாமிக்கு அலங்காரம் மற்றும் கண் திறப்பு பூஜை, கன்னிமார் சுவாமி அம்மன் அழைப்பு ,படுகளம் மற்றும் உடுக்கை பாட்டு,சுவாமிக்கு பொங்கல் படைத்தல் ,உருவாரம் எடுத்து வருதல் ,சுவாமிக்கு அலங்காரம் மற்றும் உச்சி கால மகா பூஜை உள்ளிட்ட பல்வேறு வழிபாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் 150க்கும் மேற்பட்ட பன்றிகள்,100க்கும் மேற்பட்ட ஆட்டுகிடாக்கள்,சேவல்கள் பலியிடப்பட்டு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். முன்னதாக பொங்கல் விழாவை முன்னிட்டு புதிய சிற்பிகள் இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பில் திண்டு பாலுவின் ராயல் ஆர்கெஸ்ட்ரா குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இன்னிசை நிகழ்ச்சியை நகராட்சி தலைவர் கவிதா ராஜேந்திரகுமார் தொடங்கி வைத்தார்.

விழாவிற்கு மன்றத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். திண்டுபாலு, மோகனகண்ணன், ஜெயபாலன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் ரவிக்கண்ணன் வரவேற்றார்.இதில் கவுன்சிலர்கள் சசிரேகா ரமேஷ்குமார் ,தண்டபாணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.காவல் துறை,பல்லடம் நகராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு மற்றும் தூய்மை பணிகள் செய்யப்பட்டு இருந்தது. திருவிழாவில் பல்லடம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.விழா ஏற்பாடுகளை கோவில் கமிட்டியாளர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News