உள்ளூர் செய்திகள்

ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்த காட்சி.

ஏலகிரிமலையில் சுற்றுலா பயணிகள் குதூகலம்

Published On 2023-05-29 07:44 GMT   |   Update On 2023-05-29 07:44 GMT
  • 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளை ரசித்தனர்
  • படகுகளில் சவாரி செய்து மகிழ்ந்தனர்

ஜோலார்பேட்டை,

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எப்போதும் ஒரே சம சீதோசன நிலை காணப்படுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் மற்றும் வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணிகளை அதிக அளவில் கவர்ந்து வருகிறது.

மேலும் மா, பலா, வாழை என முக்கனிகள் விளையும் இடமாகவும் ஏலகிரி மலை உள்ளது. பொன்னேரி மலையடிவாரத்தில் இருந்து ஏலகிரி மலைக்கு செல்ல 14 கொண்டை ஊசி வளைவுகளில் இயற்கை காட்சிகளையும் ரசித்து கொண்டு சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

மேலும் ஏலகிரி மலையில் படகு சவாரி, செயற்கை நீர்வீழ்ச்சி, பூங்கா, முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா இடங்களை கண்டு களித்து செல்கின்றனர். ஏலகிரி மலையில் உள்ள படகுகளில் சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.

கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் ஏலகிரி மலையில் உள்ள சுற்றுலா தலங்களை கண்டுகளித்து மகிழ்ந்தனர்.

மேலும் கடந்த 2 நாட்களாக வார விடுமுறை என்பதால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதியில் இடம் கிடைக்கவில்லை.

ஏலகிரி மலையில் உள்ள அரசு விடுதி மற்றும் தனியார் விடுதிகள் அனைத்தும் நிரம்பியது.

பெரும்பாலும் சுற்றுலா பயணிகள் ஆன்லைன் தங்கும் விடுதி புக்கிங் செய்வதால் திடீரென வரும் சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதி கிடைக்காமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

எனவே ஏலகிரி மலையில் அரசு விடுதியான யாத்திரை நிவாஸ் விடுதியில் கூடுதலாக தங்கும் விடுதிகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News