போலி பணி நியமன ஆணை தயாரித்தவர் போலீசுக்கு பயந்து தற்கொலை?
- வீடியோ வெளியிட்டு ரெயில் முன்பு பாய்ந்தார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே உள்ள அடியத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 45). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று தாமலேரி முத்தூர் ெரயில்வே மேம்பாலம் பகுதியில் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பாக திருப்பதி சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அதில் தான் வாங்காத பணத்தை கேட்டு கும்பல் தொந்தரவு செய்தனர். நான் ஒரு ரூபாய் கூட வாங்கவில்லை. எனக்கு பயமாக உள்ளது. எனவே காவல்துறை அதிகாரிகள் அவர்களை அழைத்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் திருப்பதி வீடியோவில் கூறிய 5 பேரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
இதில் அவர்களிடம் அதே பகுதியைச் சேர்ந்த மற்றொருவர் பணம் வாங்கியது தெரிய வந்துள்ளது. மேலும் அவர்கள் நாங்கள் திருப்பதியிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்யவில்லை என தெரிவித்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில் திருப்பதி மின்வாரியத்தில் பணி வாங்கி தருவதற்காக போலியாக பணி நியமன ஆணை தயாரித்து வழங்கியது தெரியவந்துள்ளது .இதனால் அவர் போலீசுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.