புல்லூர் தடுப்பனையில் மூழ்கி கார்பெண்டர் பலி
- குளிக்க சென்ற போது பரிதாபம்
- நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் உடல் மீட்பு
வாணியம்பாடி:
வாணியம்பாடி அடுத்த சின்னமோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 30). கார்பென்டராக வேலை செய்து வந்தார்.
இவர் நேற்று மாலை தமிழக -ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் கனகநாச்சியம்மன் கோவிலுக்கு நண்பர்களுடன் சென்றார். பின்னர் அங்கு உள்ள பாலாற்றின் தடுப்பணையில் நண்பர்களுடன் குளித்து கொண்டு இருந்தார். அப்போது திடீரென கோவிந்தராஜி ஆழமான பகுதிக்கு சென்று நீரில் மூழ்கினார்.
அவரை நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர். பல மணி நேரம் போராடியும் கோவிந்தராஜ் கிடைக்கவில்லை.
இது குறித்து ஆந்திர மாநிலம், குப்பம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து கோவிந்தராஜை தடுப்பணையில் தேடினர். நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்காததால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்து சென்று விட்டனர்.
இன்று காலை குப்பம் போலீசார் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தடுப்பணை பகுதியில் கோவிந்தராஜை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் அவர் பிணமாக மீட்கப்பட்டார். கோவிந்தராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் இது சம்பந்தமாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.