உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலைக்கு கிரிவலம் வரும் பக்தர்கள் துணி பை பயன்படுத்த வேண்டும்

Published On 2023-08-29 08:17 GMT   |   Update On 2023-08-29 08:17 GMT
  • கலெக்டர் வேண்டுகோள்
  • பவுர்ணமியை முன்னிட்டு ஆய்வு கூட்டம் நடந்தது

வேங்கிக்கால்:

ஆவணி மாத பவுர்ணமி நாளை (புதன்கிழமை) காலை 10.58 மணிக்கு தொடங்கி மறுநாள் (வியாழக்கிழமை) காலை 7.05 மணிக்கு நிறைவடைகிறது.

பவுர்ணமியை முன்னிட்டு திருவண்ணா மலை அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவலப்பாதையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த அரசு அலுவலர்கள் உடனான ஆய்வு கூட்டம் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கலெக்டர் பா.முருகேஷ் தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

கோவிலில் பக்தர்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் இலவசமாக சாமி தரிசனம் செய்ய தேவையான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்ய வேண்டும்.

கோவில் அலுவலர்கள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு பக்தர்கள் வரிசையில் செல்வதற்கான வழிப்பாதைகளை முறையாக அமைக்க வேண்டும்.

மருத்துவ துறையினர் அருணாசலேஸ்வரர் கோவில் மற்றும் கிரிவல பாதையை சுற்றி மருத்துவ முகாம்கள் அமைக்க வேண்டும். 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைத்திருத்தல் வேண்டும்.

கிரிவலப் பாதையை நகராட்சி துறையினர் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை நகராட்சியுடன் இணைந்து சாலை யோர ஆக்கிர மிப்புகளை முழுமையாக அகற்ற வேண்டும். போக்கு வரத்து துறையின் சார்பில் தற்காலிக பஸ் நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதியான குடிநீர், கழிவறை வசதிகளை அமைத்து தர வேண்டும். காவல் துறையின் மூலமாக கண்காணிப்பு கேமராக்கள் சரியான முறையில் இயங்குகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

துணி பை

பொதுமக்கள், பக்தர்களுக்கு எவ்வித இடையூறு இல்லாமல் பாதுகாப்பு பணியில் ஈடுபட வேண்டும். பவுர்ணமி அன்று கிரிவல பாதையில் தீயணைப்பு துறையினர் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

கிரிவலம் வரும் பக்தர்கள் ஒரு முறை பயன்படுத்தப்படும் நெகிழியை தவிர்த்து துணிப்பையை பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரிய தர்ஷினி, அறநிலை யத்துறை மண்டல இணை ஆணையர் சுதர்சனம் உட்பட அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News