மாமல்லபுரம் குலசேகர ஆழ்வார் மடத்தில் திருமஞ்சன வழிபாடு- தலசயன பெருமாள் கோயிலில் நடத்தாததால் பக்தர்கள் ஏமாற்றம்
- பூதத்தாழ்வார் அவதரித்த நாளை முன்னிட்டு நாலாயிர திவ்விய பிரபந்த சேவை சாற்றுமுறை பாசுரங்கள் பாடப்பட்டன
- பூதத்தாழ்வருக்கு திருமஞ்சனம், மங்களாசாசனம் என வைணவ ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டன.
மாமல்லபுரம்:
மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயில், 108 வைணவ திவ்ய தலங்களில் 63வது கோயிலாகும். இந்த கோயிலில் பூதத்தாழ்வார் சன்னிதி உள்ளது. கோவிலில் திருப்பணிகள் நடந்து வருவதால், கோயில் பாலாலயத்தில் உள்ளது. இதனால் பூதத்தாழ்வார் அவதார உற்சவ நாளான நேற்று திருமஞ்சனம் வழிபாடு நடத்தவில்லை. இதனால் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வைணவ பக்தர்களுக்காக, மாமல்லபுரம் குலசேகர ஆழ்வார் மடத்தில் பூதத்தாழ்வார் அவதரித்த நாளை முன்னிட்டு உலக நன்மை வேண்டியும், மழை வெள்ளம், பேரிடர் போன்றவற்றில் சிக்காமல் மக்களை காத்து அவர்கள் நலமுடன் வாழ வேண்டியும் வைணவ பாகவதர்கள் பங்கேற்ற பூதத்தாழ்வாரை போற்றி நாலாயிர திவ்விய பிரபந்த சேவை சாற்றுமுறை பாசுரங்கள் பாடும் நிகழ்ச்சி நெய்குப்பி கிருஷ்ண ராமானுஜ தாசர் தலைமையில் கடந்த 10 நாட்களாக நடைபெற்றது.
முன்னதாக மண்டபத்தில் உள்ள பூதத்தாழ்வருக்கு திருமஞ்சனம், மங்களாசாசனம் என வைணவ ஆகம முறைப்படி பூஜைகள் நடத்தப்பட்டன.
இதனால் மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் திருமஞ்சன உற்சவம் பார்க்க வந்த பக்தர்கள், குலசேகர ஆழ்வார் மடத்தில் உற்சவம் பார்த்து பூதத்தாழ்வார் அருள் பெற்று சென்றனர்.