பச்சையம்மன் கோவிலில் திருட்டு நடந்த இடத்தை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்திய காட்சி.
கோவில்களில் பூட்டை உடைத்து நகை திருட்டு:அரசு பள்ளியிலும் கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்
- காரிமங்கலம் அருகே 2 கோவில்களில் 9 பவுன் நகை, ரூ.4 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
- அருகருகே திருட்டு சம்பவம் நடந்ததால் பொதுமக்கள் அச்சம்
தருமபுரி
தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டி அருகே உள்ள பூலாம்பட்டி கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்குள்ள பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி முதல் சனிக்கிழமை என்பதால் பூஜைகள் முடிந்து வழக்கம்போல் கோவில் அர்ச்சகர் கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். இந்நிலையில் இன்று காலை சென்று பார்த்த போது கோவில் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
அவர் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு அதிலிருந்த 2 பவுன் தங்க நகைகள் திருடு போய் இருந்தது. இதனை அறிந்த அந்த பகுதி மக்கள் கோவில் முன்பாக கூடினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
அதேபோல் அதே பகுதியில் உள்ள பச்சையம்மன் கோவில் கதவு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த உண்டியலில் இருந்த 7 பவுன் நகைகள் கொள்ளடிக்கப்பட்டு இருப்பதை கோவில் அர்ச்சகர் இன்று காலை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே கோவில் நிர்வாகிகள் மற்றும் பக்தர்களிடம் தகவல் தெரிவித்தார். இதனால் அந்த பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
2 கோவில்களிலும் சேர்ந்து ரூ.4 லட்சம் மதிப்புள்ள 9 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை யடித்துச் சென்று ள்ளனர். இந்த இரு திருட்டு சம்பவங்கள் குறித்து கோவில் நிர்வாகிகள் அளித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து நகை களை கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல் பெரியாம் பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமால் நேற்று தனது அறையை பூட்டி விட்டு சென்று உள்ளார். இந்நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்து பார்த்தபோது தன்னுடைய அறையின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே இருந்த கம்ப்யூட்டர் மற்றும் டேட்டா பொருட்கள் திருட்டு போயிருந்தது.
இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் திருமால் கொடுத்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை வைத்து திருட்டில் ஈடுப்பட்ட வர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் பெரியாம் பட்டியில் 2 கோவில்கள் மற்றும் பள்ளியில் நடந்துள்ள கொள்ளை சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.