உள்ளூர் செய்திகள்

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஹைதர் அலி பேட்டியளித்தார்.

ஒன்றிய அரசு இஸ்லாமியர்களை பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறது

Published On 2022-09-29 09:29 GMT   |   Update On 2022-09-29 09:29 GMT
  • இஸ்லாமிய மக்களின் ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து வருகிறது.
  • 2024 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இவர்கள் கெடுத்து விடுவார்கள்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நிருபர்களை சந்தித்த ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் மாநில தலைவர் ஹைதர் அலி கூறியதாவது,

இந்திய தேசம் ஒரு நெருக்கடியான சூழ்நிலையில் சென்று கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறது.

இந்திரா காந்தி அவசரகால சட்டம் கொண்டு வந்த போது கூட சில அடக்குமுறைகளை செய்தாலும் பல்வேறு நல்ல விஷயங்கள் நடைபெற்றது.

ஆனால் இன்று அது போன்ற அவசர கால சட்டம் இல்லாமல் பல்வேறு அடக்குமுறைகளை பார்த்து வருகிறோம்.

இந்தியா முழுவதும் 17 மாநிலங்களில் இயங்கி வரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற இஸ்லாமிய வெகுஜன அமைப்பை பா.ஜனதா அரசு தடை செய்துள்ளது.

தொடர்ந்து இஸ்லாமிய மக்களின் ஒவ்வொரு உரிமைகளையும் பறித்து வருகிறது. குறிப்பாக காஷ்மீரில் அந்த மக்களுக்கு இருந்த தனி அந்தஸ்து என்கிற சட்டத்தை நீக்கியது.

பிஎப்ஐ பல்வேறு சமூக சேவைகளை செய்து வந்துள்ளது.

குறிப்பாக கொரோனா காலங்களிலும் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்யும் சேவைகளை செய்துள்ளனர்.

இவர்களைத்தான் தேச விரோத சக்திகள் என ஒன்றிய அரசு கூறி தடை செய்துள்ளது அதேபோல் இஸ்லாமியர்களை பழிவாங்கும் விதமாக சி.ஏ.ஏ என்.சி.ஆர் உள்ளிட்ட கருப்பு சட்டங்களை ஒன்றிய அரசு இயற்றியது.

அதனை எதிர்த்து இந்தியா முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை பி.எப்.ஐ மற்றும் அதன் துணை அமைப்புகளும் வெற்றிகரமாக செய்து முடித்தது என்பதை கருத்தில் கொண்டு 2024 தேர்தலில் முஸ்லிம்களின் வாக்கு வங்கியை இவர்கள் கெடுத்து விடுவார்கள்.

பாசிச ஆட்சிக்கு எதிராக முஸ்லிம்கள் வாக்கு திரும்பிவிடும் என்பதாலேயே பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா என்கிற இந்த அமைப்பை வீண்பழி சுமத்தி தேச விரோதிகள் எனக்கூறி தடை செய்துள்ளனர்.

இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

காந்தி ஜெயந்திக்கும் ஆர்எஸ்எஸுக்கும் என்ன தொடர்பு உள்ளது? காந்தியையும் காந்தி கொள்கையையும் விமர்சித்தவர்கள் ஆங்கிலேயர் ஆட்சியை ஆதரித்தவர்கள் இந்த ஆர்.எஸ்.எஸ்காரர்கள் இவர்கள் காந்தி ஜெயந்தி அன்று தமிழகத்திலே பேரணி நடத்த உள்ளார்கள்.

இதற்கு நீதிமன்றமும் அனுமதி அளித்துள்ளது.

தமிழக அரசு இதில் என்ன செய்யப் போகிறது.

ஆகவே உடனடியாக தமிழக அரசு மேல்முறையீடு செய்து இந்த பேரணியை தடுத்து நிறுத்த வேண்டும்.

இதனால் சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படும்.

எடப்பாடி ஆட்சியில் கூட அனுமதி கிடைக்கவில்லை.

ஆனால் தற்போது அனுமதி கிடைக்கும் என்கிற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

அப்போது மாநிலத் துணைத் தலைவர் முசாஹூதீன், மாவட்டத் தலைவர் முதியுதீன், மாவட்ட செயலாளர் ஹாஜா மொய்தீன், மாவட்ட துணை செயலாளர் முகமது மசாயிக், மாநில ஊடக அணி துணை செயலாளர் ப ஷிர் அகமது, நகர தலைவர் ரபீர் ஆகிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News