கட்டிடத்தை மீண்டும் கட்டித்தரக்கோரி பெற்றோருடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்ட பள்ளி மாணவ-மாணவிகள்
- பள்ளியில் இருந்த பழமையான கட்டிடம் ஒன்று இடியும் தருவாயில் இருந்ததால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அந்த கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
- சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன.
சிங்கை:
நெல்லை மாவட்டம் அம்பையில் இருந்து தென்காசி செல்லும் சாலையில் மன்னார் கோவில் உள்ளது. இங்கு அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் மன்னார்கோவில், வாகை குளம், பிரம்மதேசம், வெயிலான் காலனி உள்ளிட்ட சுற்று வட்டார கிராமங்களில் இருந்து சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் இருந்த பழமையான கட்டிடம் ஒன்று இடியும் தருவாயில் இருந்ததால் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு அந்த கட்டிடம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அதன் பின்னர் அந்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படவில்லை.
இதனால் அங்கு படித்து வந்த மாணவ-மாணவிகள் அமர்ந்து படிக்க வழியில்லாமல் மரத்தடி நிழலிலும், அருகில் உள்ள சமுதாய நலக்கூடத்திலும் இருந்து படித்து வந்தனர். இதனால் சிரமம் அடைந்த அவர்கள், தங்கள் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்துள்ளனர். ஆனாலும் கட்டிடம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த பள்ளி மாணவ-மாணவிகள் இன்று காலை தங்களது பெற்றோர்களுடன் புறப்பட்டு பள்ளிக்கு சென்றனர். பின்னர் சிறிது நேரத்தில் மன்னார்புரம் ஊருக்கு அருகே அம்பை-தென் காசி சாலையில் திடீரென அவர்கள் அமர்ந்து மறியல் செய்தனர். தகவல் அறிந்து அம்பை துணை போலீஸ் சூப்பிரண்டு சதீஷ் குமார், இன்ஸ் பெக்டர் மகேஷ் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பேச்சு வார்த்தை நடத்தினர்.
ஆனாலும் மாணவ-மாணவிகள், பெற்றோர் சாலைமறியலில் தொடர்ந்து ஈடுபட்டனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. அவர்களிடம் தாசில்தார் சுமதி மற்றும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகளுடன் அவர்களுடன் பெற்றோரும் சேர்ந்து மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.