உள்ளூர் செய்திகள்

போலி மருத்துவ முகாம் நடத்தியதாக 4 பேரை பொதுமக்கள் சிறைபிடித்தனர்

Published On 2023-08-15 15:38 IST   |   Update On 2023-08-15 15:38:00 IST
  • ஒரு நபருக்கு ரூ.30 வீதம் வசூல் செய்து 40 பேருக்கு பரிசோதனை செய்தனர்.
  • சிறைபிடிக்கப்பட்ட 4 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

கும்பகோணம்:

கும்பகோணம் அடுத்த சோழபுரம் மகாராஜபுரத்தில் 350 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்துக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்ற 4 நபர்கள், நாங்கள் தனியார் தொண்டு நிறுவனம் மூலம் மருத்துவ முகாம் நடத்தி வருகிறோம்.

உங்களது கிராமத்திலும் முகாம் நடத்த உள்ளோம். குறைந்த அளவு பணம் செலுத்தினால் சிகிச்சை அளிக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் தெரிவித்தனர்.

இதை நம்பிய 80 குடும்பத்தினருக்கு 2 நாட்களுக்கு முன்பு டோக்கன் கொடுத்து சென்றுள்ளனர்.

அவர்கள் கூறியது போல் அந்த 4 பேரும் நேற்று ஊராட்சி தலைவரை சந்தித்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி கட்டிடத்தில் மருத்துவ முகாம் நடத்த அனுமதி கேட்டுள்ளனர்.

அவர் அனுமதி அளித்ததை தொடர்ந்து, பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது.

முகாமில் ஒரு நபருக்கு ரூ.30 வீதம் வசூல் செய்து 40 பேருக்கு பரிசோதனை செய்தனர்.

இந்நிலையில், முகாமில் கலந்து கொண்டு மாத்திரை வாங்கி சாப்பிட்ட பெண் ஒருவர் தனது வீட்டுக்கு சென்றதும் மயக்கம் அடைந்துள்ளார்.

அவரை உடனடியாக அக்கம், பக்கத்தினர் மீட்டு மருத்துவ முகாம் நடந்த இடத்துக்கு கொண்டு வந்து அங்கிருந்தவர்களிடம் என்ன மாத்திரை கொடுத்தீர்கள்? என கேட்டுள்ளனர்.

அதற்கு அவர்கள் சரியாக பதில் கூறாததால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள், அந்த நபர்களிடம் நீங்கள் உண்மையிேலயே டாக்டர்கள் தானா? உங்களது சான்றிதழை காண்பியுங்கள் என்று கேட்டு அவர்களை பள்ளியிலேயே சிறைபிடித்தனர்.

பின்னர், இதுகுறித்து சோழபுரம் போலீசாருக்கு தெரிவித்ததை தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட 4 பேரையும் மீட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று மக்களுக்கு என்ன மருந்து கொடுத்தீர்கள்? என்றும் அவர்கள் உண்மையான டாக்டர்கள் தானா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News