2 குட்டிகளை யானைகள் கூட்டத்துடன் சேர்க்க வனத்துறையினர் தீவிரம்
- தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் 30-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- ஒகேனக்கல் வனப்பகுதி கோடுபட்டி பகுதியில் இரண்டு யானைக் கூட்டங்கள் முகாமிட்டுள்ளது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம் காளிகவுண்டன் கொட்டாய் பகுதியில் விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி நேற்று முன் தினம் இரவு 2 பெண் மற்றும் மக்னா யானை என மொத்தம் 3 யானைகள் உயிரிழந்தது.
இந்த யானைகளுடன் வந்த 2 குட்டி யானைகள், தாய் உயிரிழந்தது தெரியாமல் தட்டி தட்டி எழுப்பி பரிதாபமாக அதே பகுதியிலேயே தவிப்புடன் சுற்றி வருகிறது. இந்த இரண்டு குட்டி யானைகளையும் பாதுகாப்பாக மீட்டு முதுமலை சரணாலயத்திலும், யானைகள் கூட்டத்திலும் விடுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட வனத் துறையினர் மாவட்ட வன அலுவலர் அப்பல்லோ நாயுடு, மண்டல வன கோட்ட அலுவலர் வின்சென்ட், மருத்துவர் பிரகாஷ், பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையிலான வனத் துறையினர், வேட்டைத் தடுப்பு காவலர்கள் யானை குட்டிகளை பாதுகாப்பாக மீட்பதற்கு கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் யானைக்கு முலாம்பழம், பலாப்பழம், கோசாப் பழம், குளுக்கோஸ், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வகையான உணவுகளை ஆங்காங்கே வைத்து, வேட்டை தடுப்பு காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
இந்த குட்டி யானைகள் உணவை எடுப்பதற்கு வந்தால், பாதுகாப்பாக யானையை பிடிப்பதற்கு வலையோடு வனத் துறையினர் காத்திருகின்றனர்.
ஆனால் தாயை இழந்த இரண்டு குட்டி யானைகளும் அருகில் உள்ள வாழைத்தோட்டத்திற்குள் நுழைவதும், மீண்டும் தனது தாய் இருந்த இடத்திற்கு வந்து பார்ப்பதும் என சுற்றி சுற்றி வந்து கொண்டிருக்கிறது.
யானை உயிரிழந்த பகுதிக்கு அருகில் உள்ள கல்லாகரம் பகுதியில் உள்ள உப்பு பள்ளம் ஓடை பகுதியில் இரண்டு குட்டி யானைகளும் முகாமிட்டுள்ளது.
இதனை தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறையினர் 30-க்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும் இரண்டு குழுக்கள் அருகில் உள்ள பாலக்கோடு வன சரக்கத்திற்குட்பட்ட பெட்ட முகிழாலம், ஒகேனக்கல் வனப்பகுதி கோடுபட்டி பகுதியில் இரண்டு யானைக் கூட்டங்கள் முகாமிட்டுள்ளது.
அதனை கண்காணிக்க இரண்டு வனக்குழு சென்றுள்ளது. மேலும் அந்த யானை கூட்டத்தில் குட்டி யானைகள் ஏதாவது இருக்கின்றதா என்ன கண்காணித்து இந்த யானை குட்டிகளைகொண்டு சேர்க்கும் பணியில் வனத்துறையினர் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் ஒரு வயது குட்டி யானை உணவு அருந்தாமல் ஆக்ரோசமாக தாயைத் தேடி அலைந்து வருகிறது. இரண்டு வயது யானை குட்டி அதற்கு துணையாக பின் தொடர்ந்து சுற்றி வருகிறது. இந்த இரண்டு யானை குட்டிகளின் பரிதாப நிலையை பார்த்து அப்பகுதி விவசாயிகள் பிடித்து உடனடியாக யானை கூட்டத்தோடு சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.