உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் நலத்திட்ட உதவி வழங்கிய போது எடுத்த படம்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சியை முதல்-அமைச்சர் நடத்தி வருகிறார் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

Published On 2023-03-12 07:21 GMT   |   Update On 2023-03-12 07:21 GMT
  • தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
  • வருவாய்த்துறை மூலம் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான உத்தரவு 21 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி:

தூத்துக்குடியில் சமூக நலத்துறை சார்பில் திருமண நிதியுதவி, தாலிக்கு தங்கம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு ஏழை எளிய மக்களின் நலனுக்காக தேவைப்படும் அத்தனை திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சியினை நடத்தி வருகிறார்.

100 பெண்கள்

இந்த விழாவில் ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 86 பேர், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 பேர், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 12 பேர் என மொத்தம் 100 பெண்களுக்கு ரூ.43.75 லட்சம் மதிப்பில் தாலிக்கு தங்க நாணயம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டு உள்ளது. அதுபோல் அன்னை சத்திய வாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் எந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ் 77 பயனாளிகளுக்கு இலவச தையல் எந்திரமும் வழங்கப்பட்டு உள்ளது.

மேலும், வருவாய்த்துறை மூலம் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவித்தொகைக்கான உத்தரவு 21 பேருக்கு வழங்கப்பட்டு உள்ளது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் 12 பயனாளிகளுக்கு ரூ.3.15 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் மூலம் 30 பேருக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், மாவட்ட சமூக நல அலுவலர் ரதிதேவி, தூத்துக்குடி தாசில்தார் செல்வக்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சரஸ்வதி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News