கோவையில் இன்று கோவில் நடை அடைப்பு
- இரவு 7 மணிக்கு பின் வழிபாடுகள் நடைபெறும்.
- கடைசி சூரிய கிரகணம் இன்று நடக்கிறது.
கோவை:
நடப்பாண்டின் கடைசி சூரிய கிரகணம் இன்று நடக்கிறது. இன்று மாலை 5.21 மணியில் இருந்து மாலை 6.23 மணி வரை சூரிய கிரகணம் நீடிக்கிறது.சூரிய கிரகண நேரத்தில் கோவில்களின் நடை அடைக்கப்படுவது வழக்கம். அதன்படி கோவையில் உள்ள முக்கிய கோவில்களின் நடைகள் அடைக்கப்படுகிறது.
கோவை வடவள்ளி அருகே மருதமலையில் சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருப்பார்கள். இந்த கோவிலில் இன்று பிற்பகல் 3 மணி முதல் இரவு 7 மணி வரை மருதமலை முருகன் கோவில் நடை அடைக்கப்படுகிறது. அப்போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை.
சூரிய கிரகணம் முடிந்தவுடன் நாளை காலை 6 மணி முதல் வழக்கம்போல் கோவில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பொள்ளாச்சி மாசாணி யம்மன் கோவிலுக்கு உள்ளூர் வெளியூர் பக்தர்கள் என தினமும் ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து ெசல்கின்றனர்.
சூரிய கிரகணத்தையொட்டி ஆனைமலை மாசாணி யம்மன் கோவில் நடை இன்று பிற்பகல் 3 மணி முதல் அடைக்கப்படுகிறது. அந்த நேரத்தில் பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்வதற்கும் அனுமதி கிடையாது. நாளை வழக்கம்போல காலை 6 மணி முதல் நடை திறந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
ஈச்சனாரி விநாயகர் கோவில் நடை இன்று மாலை 3 முதல் இரவு 7 மணி வரை அடைக்கப்படும். இந்த சமயத்தில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
இரவு 7 மணிக்கு பின் வழிபாடுகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.இதேபோல கோவையில் உள்ள பல கோவில்களில் இன்று மாலை நடை அடைக்கப்படுகிறது.