பள்ளி மாணவியை அடித்தார் போலீஸ் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
- ஒருதலையாக காதலித்த பள்ளி மாணவியை தன்னை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி பொது இடத்தில் அடித்த வாலிபர் போலீசாரின் விசாரணைக்கு பயந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசாரின் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அடுத்த எல்லப்பன்பட்டியை சேர்ந்தவர் மணி (வயது 21) டிராக்டர் டிரைவர். ஒடுகத்தூர் அருகே உள்ள மலைகிராமத்தை சேர்ந்த 15 வயது 10-ம் வகுப்பு பள்ளி மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தார்.
நேற்று மாதனூர் பகுதியில் இருக்கும் பள்ளிக்கு மாணவி பஸ்சில் சென்றார். அப்போது பஸ்சில் ஏறி சென்ற மணி தன்னை காதலிக்குமாறு மாணவியிடம் கட்டாயப்படுத்தியுள்ளார். மாணவி மறுப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த அவர் மாணவியை கட்டாயப்படுத்தி பஸ்சில் இருந்து கீழே இறக்கி அடித்துள்ளார்.
இதனால் பள்ளிக்கு மாணவி காலதாமதமாக சென்றார். ஆசிரியர் தாமதம் குறித்து கேட்டபோது நடந்ததை மாணவி கூறினார். இதுகுறித்து உடனடியாக பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் வேப்பங்குப்பம் போலீசார் மணியை விசாரிக்க வீட்டிற்கு சென்றனர். வீட்டில் மணி இல்லாததால் அவரின் அம்மாவிடம் கூறிவிட்டு வந்துள்ளனர்.
போலீசார் வீட்டிற்கு வந்த தகவல் மணிக்கு செல்லவே விசாரணைக்கு பயந்து மணி பள்ளிகொண்டா அடுத்த பள்ளிகுப்பத்தில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றார். அங்கு தனது பாட்டியிடம் போலீசார் வந்தால் நான் இங்கு இருப்பதாக சொல்லாதே என கூறிவிட்டு நிலத்திற்கு செல்கின்றேன் என கூறி சென்றார். இந்த நிலையில் போலீசாரின் விசாரணைக்கு பயந்த மணி நிலத்தில் இருந்த வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த பள்ளிகொண்டா போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீசாரின் விசாரணைக்கு பயந்து வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.