உள்ளூர் செய்திகள்

காஞ்சிபுரத்தில் வாலிபர் அடித்துக்கொலை

Published On 2023-03-24 12:56 IST   |   Update On 2023-03-24 12:56:00 IST
  • காஞ்சிபுரம் புதிய ரெயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பிரபாகர் ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.
  • பிரபாகர் இறந்து கிடந்த இடம் அருகே அவர் கொண்டு சென்ற எலெக்ட்ரிக்கல் பொருட்கள் இருந்தது.

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் நாராயண பாளையம் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் பிரபாகர். இவரது மனைவி கருத்து வேறுபாட்டால் பிரிந்து சென்று விட்டார்.

கடந்த 10 ஆண்டுகளாக பட்டுச்சேலை விற்பனை கடையில் வேலை பார்த்து வந்த பிரபாகர் தற்போது எலக்ட்ரீசியன் தொழில் செய்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற பிரபாகர் பின்னர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் காஞ்சிபுரம் புதிய ரெயில்வே நிலையம் அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் பிரபாகர் ரத்த காயத்துடன் பிணமாக கிடந்தார்.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காஞ்சீபுரம் தாலுகா போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பிரபாகர் இறந்து கிடந்த இடம் அருகே அவர் கொண்டு சென்ற எலெக்ட்ரிக்கல் பொருட்கள் இருந்தது. வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் பிரபாகரை வழிமறித்து இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து இருப்பது தெரிந்தது. கொள்ளை முயற்சியில் இந்த கொலை நடந்ததா? அல்லது முன்விரோதத்தில் தீர்த்து கட்டப்பட்டாரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். மோப்பநாய் புதிய ரெயில் நிலையம் அருகே வரை சென்றது. பிரபாகருக்கு வேறு யாருடனும் தகராறு உள்ளதா? என்ற விபரத்தை போலீசார் சேகரித்து வருகிறார்கள்.

Tags:    

Similar News