உள்ளூர் செய்திகள்

கொலையாளியை பிடித்த தலைமை போலீஸ்காரர் சசிகுமார் பாபுவை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் பாராட்டியபோது எடுத்த படம்.

கல்லூரி மாணவியை அடித்துக்கொன்ற கட்டிட தொழிலாளி கைது

Update: 2022-09-27 05:02 GMT
  • காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய தலைமை போலீஸ்காரர் சசிகுமார் பாபு ரோந்து சென்றுள்ளார்.
  • இலுப்பக்குடி-காரைக்குடி இடையே உள்ள அரியக்குடி ரெயில்வே கேட் பகுதியில் ஒரு வாலிபர் தனியாக அமர்ந்திருந்தார்.

காரைக்குடி:

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த மாத்தூரை சேர்ந்த செல்வராஜ் என்பவர் மகள் சினேகா (வயது 22). இவர் காரைக்குடியில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் 3-ம் ஆண்டு கணிதம் படித்து வந்தார்.

இந்த நிலையில் சினேகாவும், இலுப்பக்குடி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளி கண்ணன் (28) என்பவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி காதலித்து வந்தனர். இதை தொடர்ந்து கண்ணன், சினேகா வீட்டிற்கு சென்று அவரை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார்.

அப்போது ஏற்பட்ட தகராறில் கண்ணன் சினேகாவின் தாத்தாவை கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சினேகா-கண்ணன் இடையே இருந்த காதல் முறிந்தது.

அதன் பின்னர் கண்ணன் சினேகாவிடம் கொடுத்து வைத்திருந்த பாஸ்போர்ட் மற்றும் சான்றிதழ்களை தரும்படி கேட்டுள்ளார். அதை சினேகா கொடுக்க சென்றார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த கண்ணன் இரும்பு கம்பியால் சினேகாவை அடித்து கொலை செய்து விட்டார். இது பற்றி சாக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய தலைமை போலீஸ்காரர் சசிகுமார் பாபு ரோந்து சென்றுள்ளார். அப்போது இலுப்பக்குடி-காரைக்குடி இடையே உள்ள அரியக்குடி ரெயில்வே கேட் பகுதியில் ஒரு வாலிபர் தனியாக அமர்ந்திருந்தார்.

தொப்பி மற்றும் மாஸ்க் அணிந்திருந்த அந்த வாலிபர் மதுபோதையில் இருந்தார். அவரிடம் போலீஸ்காரர் சசிகுமார் பாபு பேசியபோது, கல்லூரி மாணவி சினேகாவை கொலை செய்த கண்ணன் அவர்தான் என்பது தெரியவந்தது.

அப்போது கண்ணன் தற்கொலை செய்வதற்காக எலி பேஸ்ட் வைத்திருந்தார். அதனை போலீஸ்காரர் கைப்பற்றி அவரை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றி காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றார்.

அங்கு போலீசாரிடம் கண்ணனை ஒப்படைத்தார். இதையடுத்து அவரிடம் கல்லூரி மாணவியை கொன்றதற்கான காரணம் குறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு வினோஜி, இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தினர். தனது காதலை புறக்கணித்ததால் சினேகாவை கொன்றதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து கண்ணனை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையாளி கண்ணனை தனிநபராக பிடித்து வந்த போலீஸ்காரர் சசிகுமார் பாபுவை துணை போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார் பாராட்டினர்.

Tags:    

Similar News