உள்ளூர் செய்திகள்

ஆண்டிபட்டி அருகே கரடி தாக்கி மூலிகை சேகரிக்க சென்ற பெண் படுகாயம்

Published On 2023-07-03 05:26 GMT   |   Update On 2023-07-03 05:26 GMT
  • கண்டமனூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு கரடிகள் உலா வருகின்றன.
  • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் இருந்த கரடியை வனத்துறையினர் போராடி மீட்டனர்.

ஆண்டிபட்டி:

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கண்டமனூர் கதிர்வேல்புரத்தில் அதிக அளவு பளியர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் வேலப்பர் கோவில் அருகே உள்ள கண்டமனூர் வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று மூலிகை, ஈஞ்சமார் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

அதன்படி கதிர்வேல்புரத்தைச் சேர்ந்த செல்வி (வயது 32) என்பவர் மூலிகை சேகரிக்க அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் சென்றார். அனைவரும் திரும்பிய நிலையில் செல்வி மட்டும் வராததைக் கண்டு அவர்கள் திரும்பிச் சென்று பார்த்தனர். அப்போது வனப்பகுதியில் செல்வி காயங்களுடன் கிடந்தார்.

அவரை மீட்டு தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அவர்கள் சிகிச்சைக்கு சேர்த்தனர். மூலிகை சேகரிக்க சென்ற போது புதரில் மறைந்திருந்த ஒரு கரடி செல்வியை தாக்கியதாகவும், உயிருக்கு பயந்து ஓடிய போதும் விரட்டி கடித்ததால் காயம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கண்டமனூர் வனச்சரகத்துக்குட்பட்ட பகுதியில் அதிக அளவு கரடிகள் உலா வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு வீட்டுக்குள் இருந்த கரடியை வனத்துறையினர் போராடி மீட்டனர்.

தற்போது மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News