உள்ளூர் செய்திகள்

தீக்குளிக்க முயன்ற பெண்ணை தடுத்து விசாரணைக்கு அழைத்து சென்ற போலீசார்.


விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் மகள்களுடன் பெண் தீக்குளிக்க முயற்சி

Published On 2022-07-27 09:17 GMT   |   Update On 2022-07-27 09:17 GMT
  • தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை சூலக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
  • தீக்குளிக்க முயற்சி செய்த பெண் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரை சேர்ந்த சீதாலட்சுமி என தெரியவந்தது.

விருதுநகர்:

விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் குறைகள் தொடர்பாக மனு அளிக்க வந்திருந்தனர். அப்போது 2 மகள்களுடன் வந்திருந்த 31 வயது ஒரு பெண் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணையை 2 மகளின் மீதும் ஊற்றி பின்னர் தன் உடல் மீதும் ஊற்றி தீ வைத்துக் கொள்ள முயன்றார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி 3 பேரையும் காப்பாற்றினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்ட பெண்ணை சூலக்கரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது தீக்குளிக்க முயற்சி செய்த பெண் மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள குராயூரை சேர்ந்த சீதாலட்சுமி என தெரியவந்தது. 2 பேர் அதிகாரியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

கருத்து வேறுபாடு காரணமாக எனது கணவர் முருகன் 15 வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்று விட்டார். இதனால் எனது 2 மகள்களுடன் வாழ்ந்து வந்தேன்.

அருப்புக்கோட்டையில் ஜவுளி கடை வைத்திருந்த எனக்கும் உறவினரான கூத்திப்பாறையைச் சேர்ந்த பாலாஜிக்கு(21) பழக்கம் ஏற்பட்டது. அப்போது பாலாஜி திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறினார். இருவரும் நெருங்கி பழகினோம். அதனைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் பாலாஜி என்னை (சீதாலட்சுமி) திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இந்த திருமணத்திற்கு பாலாஜியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திருமணம் முடிந்த சில நாட்களிலேயே பாலாஜியை வலுக்கட்டாயமாக பெற்றோர் அழைத்துச் சென்றனர். இதனை தட்டிக் கேட்க சென்ற என்னை பாலாஜி குடும்பத்தினர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

மேலும் இது தொடர்பாக அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பார்த்திபன், அருப்புக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து ஆகியோர் தொடர்ந்து பொய் வழக்கு போடுவதாக மிரட்டி வருகின்றனர். மேலும் எனது மகள்களின் பள்ளிக்குச் சென்றும் போலீசார் தொந்தரவு செய்து வருகின்றனர். என் வாழ்க்கையை சீரழித்த பாலாஜியின் பெற்றோர் அவரது உறவினர்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவர் மனுவில் கூறியிருந்தார்.

Tags:    

Similar News