பொது மருத்துவம்

சாப்பிட்ட பிறகு 2 நிமிடம் நடந்தால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும்

Published On 2022-08-12 05:24 GMT   |   Update On 2022-08-12 07:24 GMT
  • தினமும் இரவு சாப்பிட்ட பிறகு மெதுவாக 2 நிமிட நேரம் நடந்தால் போதும் சர்க்கரையின் அளவு குறையும் என்று சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.
  • இரவில் சாப்பிட்டு விட்டு உடனே தூங்க செல்வது ரத்தத்தில் குளுகோஸ் அளவை அதிகரிக்கும். எனவே தான் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்துக்குள் 2 நிமிடம் மெதுவாக நடக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

சென்னை:

இந்தியாவில் 7 கோடிக்கும் மேற்பட்டவர்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த எண்ணிக்கை 2045-ம் ஆண்டு 13 கோடியாக உயரலாம் என்று கணித்துள்ளார்கள்.

வாழ்நாள் முழுவதும் மருந்து, மாத்திரையுடன் தான் சர்க்கரை நோயாளிகள் அலைகிறார்கள். ஆனாலும் சர்க்கரை அளவு கட்டுப்படாமல் அவ்வப்போது உயர்ந்து விடுவதும் உண்டு. எப்படித்தான் கட்டுக்குள் வைத்திருப்பது என்று புரியாமல் சர்க்கரை நோயாளிகள் தவிப்பதும் உண்டு.

தினமும் இரவு சாப்பிட்ட பிறகு மெதுவாக 2 நிமிட நேரம் நடந்தால் போதும் சர்க்கரையின் அளவு குறையும் என்று சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

இரவில் சாப்பிட்டு விட்டு உடனே தூங்க செல்வது ரத்தத்தில் குளுகோஸ் அளவை அதிகரிக்கும். எனவே தான் சாப்பிட்டு முடித்து ஒரு மணி நேரத்துக்குள் 2 நிமிடம் மெதுவாக நடக்கும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும்.

டைப்-2 சர்க்கரை நோயாளிகள் 5 நிமிடம் வரை நடப்பது நல்லது. சாப்பிடும் போது சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பது தெரிந்ததே. இதை குறைக்க 3 வழிகள் உண்டு என்கிறார் டாக்டர் மோகன்.

ஒன்று, கார்போ ஹைட்ரேட் அளவு குறைவான உணவை எடுத்துக் கொள்வது.

இரண்டாவது, மருந்துகளை முன் கூட்டியே சாப்பிடுவது.

3-வது, நடைபயிற்சியில் ஈடுபடுவது.

அவ்வாறு சாப்பிட்ட பிறகு நடப்பதால் தசை, செல்கள் செயல்படும். அதற்கு குளுகோஸ் தேவைப்படும். உணவில் இருந்து வரும் குளுகோஸ் அதற்கு பயன்படும்.

இரவில் நீண்ட நேரம் கழித்து சாப்பிடுவதும் உடனே தூங்க செல்வதும் கொழுப்பை அதிகரிக்க வைக்கும். கல்லீரலில் கொழுப்பு தங்கும். இதுதான் பேட்டி லிவரை உருவாக்கும்.

அதே நேரம் இதய நோய் இருப்பவர்கள் சாப்பிட்டவுடன் நடக்க கூடாது. இந்த தகவல்கள் வெளிநாட்டு ஆய்வுகள் மூலம் நிரூபணமாகி மருத்துவ இதழில் வெளியாகி உள்ளது.

வெளிநாடுகளில் விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப்பட்டாலும் நம் நாட்டை பொறுத்தவரை உணவு முறைகள், பழக்க வழக்கங்கள் வேறுபட்டவை, அரிசி உணவை நாம் அதிகம் பயன்படுத்துகிறோம். எனவே வெளிநாடுகளில் கண்டுபிடித்து உறுதி செய்யப்பட்டிருப்பது நம் நாட்டில் எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்பதை நம் நாட்டு சூழலில் ஆய்வுகள் நடத்தி உறுதிப்படுத்த வேண்டும் என்கிறார் டாக்டர் சவுந்தரராஜன்.

Tags:    

Similar News